மிக கடுமையான விளைவுகள் ஏற்படும்.. ரஷ்யாவை எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!
Donald Trump on Russia - Ukraine War | ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகஸ்ட் 15, 2025 அன்று நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது குறித்து பேசிய டிரம்ப் ரஷ்யாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டொனாட்ல் டிரம்ப்
வாஷிங்டன் டிசி, ஆகஸ்ட் 14 : உக்ரைனுக்கு (Ukraine) எதிரான போரை நிறுத்த ரஷ்யா (Russia) ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், ரஷ்யாவுக்கு மிக கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (American President Donald Trump) எச்சரித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் (Russia – Ukraine War) விவகாரம் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் நேரில் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் டிரம்ப் மற்றும் புதின்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்ப் ஜனவரி 2025 முதல் போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் புதின் சற்று இறங்கி வந்துள்ள நிலையில், நாளை (ஆகஸ்ட் 15, 2025) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் நேரில் சந்தித்து பேச உள்ளனர்.
இதையும் படிங்க : உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடியிடம் விளக்கமளித்த ரஷ்ய அதிபர் புதின்
புதின் உடனான சந்திப்பு குறித்து பேசிய டிரம்ப்
புதின் உடன் மேற்கொள்ள உள்ள சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் நாங்கள் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளோம். அப்போது முதல் 2 நிமிடங்களிலேயே ஒப்பந்தம் ஏற்படுமா, இல்லையா என்பது குறித்து தெரிந்துவிடும் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஒப்பந்தம் ஏற்படுத்துவோம். மிக விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும். அதனை உடனடியாக நான் பார்க்க விரும்புகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : இந்தியா உடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது – அதிபர் டிரம்ப் அதிரடி..
ரஷ்யா மிக கடுமையான விளைவுகளை சந்திக்கும் – எச்சரித்த டிரம்ப்
அப்போது, உக்ரைன் உடனான போரை நிறுத்திக்கொள்ள ரஷ்யா ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த டிரம்ப், மிக கடுமையான விளைவுகள் ஏற்படும். ஆம். கடுமையான விளைவுகள் இருக்கும். அது எப்படி இருக்கும் என நான் கூற வேண்டியது இருக்காது. மிக கடுமையான ஒன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.