அமெரிக்காவுடன் மோதல்.. முக்கியமான நேரத்தில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்
Russia President Putin Visit India : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு 2025ஆம் ஆண்டு இறுதியில் வருகை தர உள்ளார். அமெரிக்கா இந்தியா இடையேயான வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, முதல்முறையாக புதின் இந்தியா வருகிறார்.

டெல்லி, ஆகஸ்ட் 07 : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Russia President Vladimir Putin) 2025ஆம் ஆண்டு இறுதியில் இந்தியா (Putin India Visit) வர உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இந்தியா அமெரிக்கா இடையே வரி தொடர்பான சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே மோதல் நிலவி வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகளுக்கு அவர் வரிகளை விதித்து வருகிறார். குறிப்பாக, இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக வரிகளை அறிவித்து வருகிறார்.
முதலில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்த டிரம்ப், 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதியான நேற்று 25 சதவீத வரியை அறிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாலே இந்த வரி விதிக்கப்படுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே வணிக ரீதியான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக பதற்றங்கள் அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2025ஆம் ஆண்டு இறுதியில் இந்தியா வர உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.




Also Read : அமலுக்கு வரும் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
இந்தியாவுக்கு வருகை தரும் ரஷ்ய அதிபர்
அமெரிக்கா இந்தியா இடையேயான வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இதனை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்த அவள் உறுதிப்படுத்தி உள்ளார். ஆனால் புதனின் வருகை குறித்த தேதியே அவர் குறிப்பிடவில்லை. மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டு அஜித் தோவல், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில்ஸ் செயலாளர் செர்ஜி ஷோய்குவுடனான பேச்சுவார்த்தையின் போது , ரஷ்ய அதிபர் புதினின் வருகை உறுதி செய்தார்.
இது குறித்த அவர் பேசுகையில், ”ரஷ்யா இந்தியா இடையே நீண்ட சிறப்பு உறவு உள்ளது. இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம். எங்களுக்கு உயர் மட்ட ஈடுபாடுகள் உள்ளன. மேலும் இந்த உயர் மட்ட ஈடுபாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. ஜனாதிபதி புதினின் இந்திய வருகை பற்றி அறிந்து நாங்கள் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியடைகிறோம். தேதிகள் இப்போது கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.
Also Read : இந்தியா மீது 50% வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. முழு விவரம்!
இந்தியா ரஷ்யா வர்த்தக உறவு
பல ஆண்டுகளாக இந்தியாவும் ரஷ்யாவும் நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. குறிப்பாக இரு நாடுகளும் வர்த்தக ரீதியாக உறவைப் பேணி வருகிறது. இதில் முக்கியமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி இருக்கிறது. ரஷ்யா கச்சா எண்ணெயின் மொத்த இறக்குமதியில் 45 சதவீதம் இந்தியா வாங்குகிறது. இப்படியான சூழலில் புதினின் இந்தியா பயணம் இரு நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடங்கிய பிறகு முதன்முறையாக அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். 2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை இருமுறை சந்தித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு இருந்தார். மேலும் 2024ல் ஜூலையில் மாஸ்கோவில் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி புதினை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது