உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? ஆகஸ்ட் 15ல் டிரம்ப் – புதின் சந்திப்பு.. பரபரப்பு!
Donald Trump Putin Meet : அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சந்திக்க உள்ளார். 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

அமெரிக்கா, ஆகஸ்ட் 09 : அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ரஷ்ய அதிபர் புதினை (Trump Putin Meet) அந்நாட்டு அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, டிரம்பை புதின் சந்திக்க உள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான (Ukraine Russia) போர் நடந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நடப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடங்கியது. உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும் நோக்கில் ரஷ்யா தொடர்ந்து போர் உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு இந்த இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
அதே நோரத்தில், ரஷ்யாவுக்கு மறைமுக உதவிகளை சில நாடுகள் செய்து வருகிறது. இதற்கிடையில், இருநாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகியுடனும் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால், இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வர தயாராக இல்லை. இருப்பினும், டிரம்ப் இருநாட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் நேரில் சந்திக்க உள்ளனர்.
ஆகஸ்ட் 15ல் டிரம்ப் – புதின் சந்திப்பு
Trump to Meet Putin in Alaska on August 15, says Russia-Ukraine peace deal “very close’
Read @ANI Story |https://t.co/wq2ZVoNdPr#Putin #RussiaUkraine #US #Trump pic.twitter.com/2TTSiuR9ha
— ANI Digital (@ani_digital) August 9, 2025
இதனை டிரம்ப் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அதாவது, விளாடிமிர் புதினை, 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, “அமெரிக்க அதிபரான என்ககும் ரஷ்ய அதிபர் புதின் இடையேயான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி அலஸ்காவில் நடைபெற உள்ளது.
பிற விவரங்கள் அடுத்தடுத்து தெரிவிக்கப்படும்” என கூறினார். இந்த சந்திப்பின்போது, ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக புதின், அமெரிக்க அதிபர் டிரம்பிடம் முக்கிய கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிரம்ப் தரப்பிலும் போரை கைவிட புதினிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரிகளை விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவிடம் பெற்ற கச்சா எண்ணெயை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருவதால் வரி விதிப்பதாக கூறியுள்ளார்.
இப்படியான சூழலில், ரஷ்யா அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு நடைபெற உள்ளது. புதின் கடைசியாக அமெரிக்காவிற்கு 2015 ஆம் ஆண்டு பயணம் செய்தார், அப்போது அவர் நியூயார்க்கில் நடந்த அமெரிக்க பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன் மூலம், 10 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்காவிற்கு புதின் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.