பொருளாதார முற்றுகைக்குப் பதிலடி.. கடல் உயிரினங்களை ஆயுதமாக்கும் ஈரான்.. ஹார்முஸ் நீரிணையில் புதிய போர் வியூகம்!!
Sea Creatures Turn Weapons: ஈரானின் இந்த மிரட்டல்களை அமெரிக்கா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரானியப் படகுகளைக் கண்டதும் சுட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். தற்போது, ஈரானின் நீருக்கடியில் இருக்கும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அமெரிக்க கடற்படை பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடல்வழி முற்றுகைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் ஒரு விசித்திரமான மற்றும் சர்ச்சைக்குரிய போர் உத்தியைக் கையில் எடுத்துள்ளது. அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைத்துத் தாக்க, வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட மற்றும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட டால்பின்களை (Military-trained Dolphins) ஈரான் பயன்படுத்தக்கூடும் என்று ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது. டால்பின்களின் உடலில் கண்ணிவெடிகளைப் பொருத்தி, அவற்றை எதிரிக் கப்பல்களை நோக்கி நீந்தச் செய்வது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
இதையும் படிங்க: இனி ஒரு நாள் 25 மணி நேரமாக மாறலாம்.. நாசா சொன்ன ஷாக் தகவல்.. காரணம் என்ன?
கப்பலின் அடிப்பகுதியை இந்த டால்பின்கள் நெருங்கும்போது, அவற்றில் உள்ள வெடிகுண்டுகள் வெடித்துக் கப்பலைத் தகர்க்கும். இது ஒரு வகையான ‘காமிகாஸே’ அல்லது தற்கொலைப்படைத் தாக்குதல் முறையாகும். பொருளாதார நெருக்கடி முற்றி வரும் நிலையில், ஈரான் தனது தற்காப்புக்காக இதுவரை பயன்படுத்தாத இத்தகைய விசித்திரமான ஆயுதங்களைப் பற்றிச் சிந்தித்து வருவதாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இது ஈரானுக்குப் புதியதா?
ராணுவத் தேவைகளுக்காக டால்பின்களைப் பயன்படுத்துவது ஈரானுக்குப் புதிய விஷயமல்ல. கடந்த 2000-ஆம் ஆண்டிலேயே சோவியத் யூனியனிடம் இருந்து இத்தகைய பயிற்சி பெற்ற டால்பின்களை ஈரான் வாங்கியதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த டால்பின்கள் அவற்றின் முதுகில் ஈட்டிகளைத் தாங்கிச் சென்று இலக்குகளைத் தாக்கத் தகுந்தவாறு பயிற்சி அளிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பதிலடித் திட்டம்:
ஈரானின் இந்த மிரட்டல்களை அமெரிக்கா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரானியப் படகுகளைக் கண்டதும் சுட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். தற்போது, ஈரானின் நீருக்கடியில் இருக்கும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அமெரிக்க கடற்படை பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது.
எம்.எச்-53 (MH-53) ஹெலிகாப்டர்கள் கண்ணிவெடிகளைக் கண்டறிய உதவும். ஆளில்லா கடல் ட்ரோன்கள் ஆபத்தான பகுதிகளில் மனித நடமாட்டம் இன்றி சோதனையிடுகிறது, ஆச்சரியமாகத் தோன்றினாலும், அமெரிக்காவும் தனது கடல்சார் பாலூட்டித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற டால்பின்களைக் கண்ணிவெடிகளைக் கண்டறியப் பயன்படுத்தி வருகிறது.
பொருளாதாரத் தாக்கம்:
இந்த கடல்வழி முற்றுகையினால் ஈரானுக்கு இதுவரை சுமார் 4.8 பில்லியன் டாலர் (சுமார் ₹40,000 கோடி) எண்ணெய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பென்டகன் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த இழப்பைச் சரிசெய்யவும், அமெரிக்காவின் பிடியிலிருந்து தப்பவும் ஈரான் இத்தகைய விபரீதப் போர் முறைகளைக் கையாளத் துணிந்துள்ளதாகத் தெரிகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன ட்ரோன்கள் போர்முனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தக் காலத்தில், கடல்வாழ் உயிரினங்களைப் போருக்காகப் பயன்படுத்துவது மனிதநேயமற்ற செயல் எனச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், போர் மேகங்கள் சூழ்ந்துள்ள ஹார்முஸ் நீரிணையில் அடுத்து என்ன நடக்கும் என்பது உலக நாடுகளின் கவலையாக உள்ளது.
இதையும் படிங்க: ஹோர்முஸில் பதற்றம் அதிகரிப்பு.. சிறிய ஈரானியப் படகுகளை அழிக்க டிரம்ப் உத்தரவு
இந்தியாவுக்கு கடும் பாதிப்பு:
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80% க்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்கிறது. இதில் பெரும்பகுதி ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது. இந்த கடல்வழிப் பாதை போரினாலோ அல்லது கண்ணிவெடிகளாலோ முடக்கப்பட்டால், இந்தியாவின் எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும். இது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை விண்ணை முட்டச் செய்யும். இதனாலேயே இந்தியா இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.