AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கத்தார் எல்என்ஜி எரிவாயு வளாகத்தில் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்கள் உட்பட 13 பேர் பலி, 66 பேர் காயம்..

கத்தாரின் மிகப்பெரிய ரச் லஃபான் திரவ இயற்கை எரிவாயு (LNG) வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதாக கத்தார் எரிசக்தித் துறை அமைச்சர் சாத் அல்-காபி தெரிவித்துள்ளார்.

கத்தார் எல்என்ஜி எரிவாயு வளாகத்தில் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்கள் உட்பட 13 பேர் பலி, 66 பேர் காயம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 22 Jun 2026 20:14 PM IST

ஜூன் 22, 2026: கத்தாரின் மிகப்பெரிய ரச் லஃபான் திரவ இயற்கை எரிவாயு (LNG) வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதாக கத்தார் எரிசக்தித் துறை அமைச்சர் சாத் அல்-காபி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாட் அல்-காபி, “நான் ஒருபோதும் அறிவிக்க வேண்டாம் என்று நம்பிய ஒரு துயரமான செய்தியை இன்று தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டினரைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று கூறினார்.

விபத்தில் 66 பேர் காயம்:

இவ்விபத்தில் 66 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் யாருடைய உயிருக்கும் தற்போது ஆபத்து இல்லை என்றும் அவர் தெரிவித்தார். எனினும் உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் இந்தியர்கள் என்பது குறித்து அவர் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

கடந்த மார்ச் மாதம் ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகளை மீண்டும் தொடங்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை பார்சான் உள்ளூர் எரிவாயு விநியோக நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த விபத்தால் கத்தாரின் எரிவாயு ஏற்றுமதி நடவடிக்கைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றும், சுற்றுச்சூழலுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கத்தார் எனர்ஜி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

எரிவாயு ஏற்றுமதியை பாதிக்காது:

இதுகுறித்து அமைச்சர் சாட் அல்-காபி கூறுகையில், “இந்த விபத்து எங்கள் உலகளாவிய எரிவாயு ஏற்றுமதியை எந்த வகையிலும் பாதிக்காது. இது ஒரு விபத்து மட்டுமே; நாசவேலை அல்லது வெளிப்புற தாக்குதல் அல்ல” என்றார்.

வெடிவிபத்து வளாகத்தின் எந்தப் பகுதியில் ஏற்பட்டது, சேதத்தின் அளவு என்ன என்பது போன்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பார்சான் எரிவாயு ஆலை நாளொன்றுக்கு சுமார் 1.4 பில்லியன் ஸ்டாண்டர்ட் கனஅடி விற்பனை எரிவாயுவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருந்தது. இந்த எரிவாயு பெரும்பாலும் கத்தாரின் உள்ளூர் மின்சார உற்பத்திக்கும், அரேபிய தீபகற்பத்தின் பாலைவனப் பகுதிகளில் செயல்படும் முக்கிய கடல் நீர் குடிநீராக்கும் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ரச் லஃபான் (Ras Laffan) வளாகம் கடந்த மார்ச் மாதத்திலும் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது ஈரான் ஏவிய ஏவுகணை அந்த வளாகத்தைத் தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதுடன், கட்டமைப்புகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

Follow Us