“அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம்”.. மன்னிப்பு கேட்ட ஈரான்..
Iran Apologises to Gulf Nations: "நாங்கள் நிபந்தனையற்ற முறையில் சரணடைவோம் என்ற அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது, அது அவர்களுடனேயே புதைந்துவிடும்," என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த அறிக்கை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தனது வலுவான நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதோடு, அண்டை நாடுகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஈரானின் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக, அண்டை நாடுகளின் மீது இனி எந்தத் தாக்குதலையும் நடத்தப்போவதில்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சனிக்கிழமை அறிவித்துள்ளார். ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஈரானின் இடைக்காலத் தலைமைச் சபை நேற்று முன்தினம் இந்த முடிவை அங்கீகரித்துள்ளதாக அதிபர் தெரிவித்தார். புதிய கொள்கையின்படி, அண்டை நாடுகளின் மண்ணைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டால் ஒழிய, அந்த நாடுகளை ஈரான் இலக்கு வைக்காது.
“அண்டை நாடுகளின் மீது இனி எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது, அந்த நாடுகளிலிருந்து ஈரான் மீது தாக்குதல்கள் ஏவப்படாவிட்டால், நாங்கள் ஏவுகணைகளையும் ஏவமாட்டோம் என்று இடைக்காலத் தலைமைச் சபை அறிவித்துள்ளது,” என்று அதிபர் பெசெஷ்கியன் கூறினார்.
இதையும் படிக்க: ஈரான் போர் எதிரொலி: உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை.. ஆட்டம் காணும் அமெரிக்கப் பங்குச்சந்தை..
மன்னிப்பு கோரிய ஈரான்:
சமீபத்திய நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் பிராந்தியத்தில் ஏற்பட்ட பதற்றத்தை ஒப்புக்கொண்ட அதிபர், அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். “அண்டை நாடுகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கம் எங்களிடம் இல்லை,” என்று அவர் உறுதியளித்தார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தாங்கள் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஈரான் அதிகாரிகள் கூறி வருகின்றனர். இந்த மோதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தில் உள்ளது.
ட்ரம்ப்பின் கோரிக்கை மறுப்பு:
இந்த மோதலில் ஈரான் “நிபந்தனையற்ற சரணடைதலை” ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியதாக வெளியான செய்திகளை அதிபர் பெசெஷ்கியன் திட்டவட்டமாக மறுத்தார். “நாங்கள் நிபந்தனையற்ற முறையில் சரணடைவோம் என்ற அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது, அது அவர்களுடனேயே புதைந்துவிடும்,” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த அறிக்கை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தனது வலுவான நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதோடு, அண்டை நாடுகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஈரானின் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மேற்கு ஆசியா போர்.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா? நிலவரம் என்ன?
போர் பதற்றத்தை தணிக்கும்:
ஈரானின் இந்த அறிவிப்பு, வளைகுடா நாடுகளிடையே நிலவி வரும் போர்ப் பதற்றத்தை ஓரளவுக்குத் தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக அமெரிக்காவின் பிடியில் இருக்கும் வளைகுடா நாடுகளை ஈரானுக்கு எதிராகத் திருப்பும் முயற்சிகள் நடக்கும் நிலையில், ஈரான் தனது ‘சமாதானப் பேச்சுவார்த்தை’ மூலம் அந்த நாடுகளைத் தன் பக்கம் ஈர்க்க முயல்கிறது. இந்த அறிவிப்பு ஈரானின் தற்காப்பு நடவடிக்கையா அல்லது அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்ததா என்பது வரும் நாட்களில் அந்த நாடு பின்பற்றும் இராணுவ நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும்.