உடனே வெளியேறுங்கள்… ஈரானில் வன்முறை போராட்டங்கள் தீவிரம் – பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
Iran Travel Advisory : ஈரானுக்கான இந்திய தூதரகம், ஈரானில் தற்போது வசித்து வரும் இந்தியர்கள், பாதுகாப்பு காரணங்களால் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து வருவதை சுட்டிக்காட்டிய தூதரகம், அவசர உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது.
ஈரானில் (Iran) நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அந்நாட்டிற்கு குறிப்பாக தெஹ்ரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என தனது இந்திய மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை ஜனவரி 14, 2026 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த அறிவிப்பு வரும் வரை ஈரானுக்குச் செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் தற்போது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு, இந்தியர்கள் அனைவரும் அந்நாட்டிற்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தெஹ்ரான் நகருக்கு செல்ல வேண்டாம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்
இதனிடையே, ஈரானுக்கான இந்திய தூதரகம், ஈரானில் தற்போது வசித்து வரும் இந்தியர்கள், பாதுகாப்பு காரணங்களால் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து வருவதை சுட்டிக்காட்டிய தூதரகம், கிடைக்கும் அனைத்து போக்குவரத்து வசதிகளையும், குறிப்பாக வர்த்தக விமான சேவைகளையும் பயன்படுத்தி இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிக்க : அரிய கனிமங்களைப் பாதுகாப்பதே இலக்கு.. G7 கனிமங்கள் அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டம்..
ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள், பயணிகள், வியாபாரிகள் அனைவரும் விரைவில் வெளியேற வேண்டும் என தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், தூதரக அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் தங்களது பாஸ்போர்ட், அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் பட்சத்தில், இந்திய தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகம் வெளியிட்ட அவசர உதவி எண்கள்
அவசர உதவிக்காக இந்திய தூதரகம் ஹெல்ப்லைன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளது. அதன் படி அவசர தொடர்பு எண்கள், +989128109115, +989128109109, +989128109102, +989932179359 மற்றும் மின்னஞ்சல் முகவரி cons.tehran@mea.gov.in ஆகியவற்றின் மூலம் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சிறுமிகளை துப்பாக்கி முணையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.. 6 பேரை சுட்டுக் கொன்ற நபர் அதிரடி கைது!
மேலும், இன்னும் பதிவு செய்யாத இந்திய குடிமக்கள் அனைவரும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணைய சேவை பாதிக்கப்பட்டிருந்தால், இந்தியாவில் உள்ள குடும்பத்தினர் அவர்களின் சார்பில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


