அயதுல்லா அலி கமேனியின் மனைவி பலி.. உறுதி செய்த ஈரான் ஊடகங்கள்!
Mansoureh Khojasteh Bagherzadeh Died | ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்த நிலையில், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கமேனியின் மனைவி தற்போது உயிரிழந்துள்ளார்.
ஈரான், மார்ச் 02 : ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த அயதுல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பகர்சாதே உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கமேனியின் மரணம் ஈரானை உலுக்கியுள்ள நிலையில், தற்போது அவரது மனைவியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
ஈரான் உட்சபட்ச தலைவரை கொன்ற இஸ்ரேல், அமெரிக்கா
அணு ஆயுதங்கள் தயாரிப்பது தொடர்பாக ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், இரு நாடுகளும் இணைந்து ஈரானை தாக்கி வருகிறது. பிப்ரவரி 28, 2026 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை தாக்க தொடங்கியது. ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவருடன் ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரும், காமேனியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க : ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மரணத்தை உறுதி செய்த ஈரான் ஊடகங்கள்!
கமேனியின் மனைவி உயிரிழப்பு – ஈரான் ஊடகங்கள் உறுதி!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மனைவி மன்சௌரே கோஜஸ்தே பகர்சாதே படுகாயமடைந்தார். இரண்டு நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனை ஈரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
இதையும் படிங்க : ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்படும்.. டிரம்ப் பரபரப்பு பதிவு!
அயதுல்லா அலி கமேனி மற்றும் மன்சௌரே கோஜஸ்தே பகர்சாதே 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு 6 பிள்ளைகள் உள்ள நிலையில், மன்சௌரே கோஜஸ்தே பகர்சாதே வெளி உலகத்திற்கு பெரிதாக வராமல் இருந்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளார். அவருக்கு தற்போது வயது 79 என்பது குறிப்பிடத்தக்கது.