ஹோர்முஸ் வழியாக அனைத்து வர்த்தக கப்பல்களும் செல்ல அனுமதி.. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு!
All Commercial Ships Can Pass Through Strait Of Hormuz | மேற்கு ஆசியா போர் காரணமாக உலக நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முடியாமல் உள்ளன. இந்த நிலையில் தான், ஹோர்முஸ் வழியாக அனைத்து வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என்று ஈரான் அமைச்சர் கூறியுள்ளார்.
புதுடெல்லி, மே 14 : ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக அனைத்து வர்த்தக கப்பல்களும் செல்ல அனுமதி உள்ளது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். வெளியுறவு துறை அமைச்சர்களுக்கான கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் இந்த முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஹோர்முஸ் வழியாக அனைத்து வர்த்தக கப்பல்களும் செல்லலாம் – ஈரான் அமைச்சர்
புதுடெல்லியில் இன்று பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளை சேர்ந்து வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஈரான் வெளியுறவு துறை மந்திரி சையது அபாஸ் அராக்கி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பாலும் அதன் முற்றுகையாலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் பரபரப்பு தகவல்
எங்களுடைய பார்வையில் ஹோர்முஸ் நீரிணை அனைத்து வர்த்தக கப்பல்களுக்கும் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் எங்களது கடற்படை உடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த தடையையும் உருவாக்கவில்லை. அமெரிக்காவின் முற்றுகையால் அது உருவானது. அமெரிக்காவில் உருவான இந்த தடுப்பு நடவடிக்கைகளை நீக்கினால் இந்த சிக்கலான நிலை முடிவுக்கு வரும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சொன்ன பிரதமர்.. மாற்று என்ன?
மேற்கு ஆசியா போர் காரணமாக உலக அளவில் ஏற்பட்ட சிக்கல்
மேற்கு ஆசிய போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதன் காரணமாக பெட்ரோல், டீசலுக்காக உலக நாடுகளை நம்பியுள்ள நாடுகள் கடும் சவால்களை சந்தித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், சில உலக நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய அரசு அந்நிய செலாவணியை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஈரான் அமைச்சர் கூறியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.