UPI : யுபிஐ-ல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
UPI Payment Changes | இந்தியாவை பொருத்தவரை கோடிக்கணக்கான பொதுமக்கள் யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களுக்கு எளிதாக சேவையை வழங்கும் வகையில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சில புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளை அதிகம் பயன்படுத்தும் நிலையில், அதில் இன்று (ஆகஸ்ட் 1, 2025) முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. வங்கி கணக்கு இருப்பு பரிசோதனை (Balance Check), மொபைல் எண் மற்றும் வங்கி கணக்குகள், ஆட்டோ டெபிட் பரிவர்த்தனை (Auto Debit Transaction) நேர வரம்புகள் என சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், யுபிஐ-ல் வந்துள்ள புதிய மற்றும் முக்கிய அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யுபிஐ-ல் வந்துள்ள முக்கிய மாற்றங்கள் – என்ன என்ன?
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) அவ்வப்போது யுபிஐ விதிகள் மற்றும் பயன்பாட்டில் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் விரைவான சேவையை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் யுபிஐ-ல் சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : UPI : யுபிஐ-ல் பயோமெட்ரிக் மூலம் பண பரிவர்த்தனை?.. விரைவில் அமலுக்கு வரும் புதிய அம்சம்?




வங்கி கணக்கு இருப்பு பரிசோதனை கட்டுப்பாடு
கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலம் வங்கி கணக்கு இருப்பை பரிசோதனை செய்வதற்கான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி வரும் காலங்களில் பயனர்கள் தங்களது யுபிஐ செயலிகள் மூலம் ஒரு நாளுக்கு 50 முறை மட்டுமே வங்கி கணக்கு இருப்பை சோதனை செய்ய முடியும். அடிக்கடி, வங்கி கணக்கு இருப்பை பரிசோதனை செய்வது யுபிஐ சேவையை பாதிக்கும் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ கணக்குகளை சரிப்பார்க்க 25 முறை மட்டுமே அனுமதி
மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை சரிப்பார்க்க ஒரு நாளுக்கு 25 முறை மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும். இந்த மாற்றம் இன்று (ஆகஸ்ட் 01, 2025) முதல் அமலுக்கு வருகிறது. அடிக்கடி வங்கி கணக்குகளை சரிப்பார்ப்பது யுபிஐ சேவையை பாதிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : UPI : யுபிஐ பண பரிவர்த்தனையில் முன்னிலை வகிக்கும் இந்தியா.. சர்வதேச நிதியம் அறிக்கை!
ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகளுக்கு புதிய வரம்பு
பயனர்கள் தங்களது யுபிஐ செயலிகளில் ஆட்டோ டெபிட் அம்சத்தை பயன்படுத்துகின்றனர். அதாவது நெட்பிளிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட செயலிகளுக்கு ஆட்டோ டெபிட் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த ஆட்டோ டெபிட் முறைக்கு நேர வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல் 5 மணி வர மற்றும் இரவு 9.30-க்கு பிறகு ஆகிய நேரங்களில் மட்டுமே பணம் பிடித்தம் செய்யப்படும்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் இன்று (ஆகஸ்ட் 01, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.