UPI : யுபிஐ பண பரிவர்த்தனையில் முன்னிலை வகிக்கும் இந்தியா.. சர்வதேச நிதியம் அறிக்கை!
UPI Transaction Boom in India | இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யுபிஐ (UPI - Unified Payment Interface) பண பரிவர்த்தனை முறை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் ரூ.1,800 கோடிக்கு பண பரிமாற்றம் நடைபெறுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்தியாவை பொருத்தவரை சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ பரவலாக பயன்படுத்தப்படுகிறது. காகிதமில்லா பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், இந்த அம்சம் நடைமுறையில் உள்ளது. ஏடிஎம்களுக்கு சென்று பணத்தை எடுத்து செலவு செய்வதை சிரமமாக நினைக்கும் பொதுமக்கள் இவ்வாறு யுபிடி மூலம் பணம் செலுத்துவதை மிகவும் எளிமையானதாக கருதுகின்றனர். இவ்வாறு பல்வேறு வகைகளில் பொதுமக்களின் வாழ்வில் யுபிஐ முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அதன் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை
அதிகரித்து வரும் சில்லரை டிஜிட்டல் பணம் செலுத்துதல் என்ற தலைப்பில் சர்வதேச நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை இந்தியா 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. இது ஏராளமான வங்கி கணக்குகளை ஒரே செல்போன் செயலி மூலம் இணைக்க அனுமதி வழங்குகிறது. இந்த அம்சத்தின் மூலம் எளிதாக, உடனடியாக மற்றும் பாதுகாப்பான முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் ரூ.1,800 கோடிக்கு பண பரிமாற்றம் நடைபெறுகிறது
யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் ரூ.1,800 கோடிக்கு பண பரிமாற்றம் நடைபெறுகிறது. இந்த அளவு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 32 சதவீதம் வரை அதிகரிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த யுபிஐ பண பரிமாற்ற முறை இந்தியாவை பணம் செலுத்தும் முறையில் இருந்து மாற்றி டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தள்ளியுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, யுபிஐ தனிநபர் மற்றும் சிறுதொழில்கள் நிதி உள்ளடக்கத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.




இதையும் படிங்க : யுபிஐ விதிகளில் புதிய மாற்றம்: Chargeback கோரிக்கையில் வங்கிகளுக்கு நேரடி அனுமதி!
மொத்த பண பரிவர்த்தனையில் 85 சதவீதம் யுபிஐ பண பரிவர்த்தனை
சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது, இந்தியாவில் நடைபெறும் அனைத்து டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளில் 85 சதவீதம் யுபிஐ கணக்குகள் மூலம் நடைபெறுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இதில் 49 கோடியே 10 லட்சம் பேரும், 6 கோடியே 50 லட்சம் வணிகர்களும், 675 வங்கிகளும் ஒரே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த யுபிஐ முறைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் பணம் செலுத்துவதில் யுபிஐ 50 சதவீதம் உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.