இனி பாஸ்வேர்டு தேவையில்லை… ஃபேஸ்புக்கின் புதிய Passkey லாகின் வசதி
Facebook Feature Alert: மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு புதிய பாஸ்கீ லாகின் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம்,பயனர்கள் இனி பாஸ்வேர்ட் இல்லாமல்,கைரேகை, முக அடையாளம் அல்லது பின் பயன்படுத்தி பாதுகாப்பாகவும் வேகமாகவும் லாகின் செய்ய முடியும். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
மெட்டா (Meta) நிறுவனம் ஃபேஸ்புக் பயனர்களுக்காக ஒரு முக்கியமான பாதுகாப்பு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் பாஸ்வேர்ட் இல்லாமலேயே நுழைய முடியும். இதற்கு பதிலாக, பாஸ்கீ (Passkey) எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளது. இப்போது இந்த வசதி ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்குப் பயன்படுத்தக் கிடைக்கும். விரைவில் மெசெஞ்சர் மற்றும் மெட்டா பே போன்ற சேவைகளிலும் இந்த முறை நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் பாஸ்வேர்டை தவறாக பயன்படுத்துதல் தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் பயனர்கள் ஃபேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பாஸ்கீ என்றால் என்ன?
பாஸ்கீ என்பது நமது பாஸ்வேர்டை பாதுகாப்பாக டிஜிட்டல் முறையில் மாற்றும் ஒரு முறையாகும். இதன் மூலம் பாஸ்வேர்டு பயன்படுத்துவதற்கு பதிலாக, உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தபடிய கைரேகை, முக அடையாளம், அல்லது பின் (PIN) ஆகியவை மூலம் லாகின் செய்யும் வசதியை அளிக்கிறது. நமது போனிலும் மெட்டா சர்வரிலும் இந்த பிராசஸ் நடக்கும். இதனால் ஹேக்கர்கள் உங்கள் சர்வரை தாக்கினாலும் உங்கள் போனின் அனுமதி இல்லாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் நுழைய முடியாது. இதனை ஃபிடோ அலையன்ஸ் (FIDO Alliance) என்ற அமைப்பு உருவாக்கியுள்ளது.
பாஸ்கீ பயன்பாட்டின் முக்கியத்துவம்
மெட்டா அமைப்பு கூற்றின் படி பாஸ்கீ என்பது நமது பாஸ்வேர்டுகள் திருட்டு அல்லது ஹேக்கர்களின் மோசடிகள் ஆகிய சைபர் கிரைம் தொடர்பான பிரச்னைகளை தடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருக்க தேவை இல்லை. பாதுகாப்பான மற்றும் வசதியான முறையாக பார்க்கப்படுகிறது. ஹேக்கிங் முறைகளை முற்றிலும் தடுக்கும்.
இது தொடர்பாக மெட்டா தெரிவித்துள்ளதாவது, பாஸ்கீ உருவாக்கும்போது, பயோமெட்ரிக் முறையில் முகம், கை ரேகை ஆகிய செயல் முறைகள் உங்கள் போன் மூலம் தான் நடைபெறும். மெட்டாவோ அல்லது மற்றவர்களோ அதனை கண்காணிக்க முடியாது. இதனால் உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஃபேஸ்புக்கில் பாஸ்கீ எப்படி அமைப்பது?
-
Settings > Account Center > Password and Security
-
Create Passkey என்பதைக் கிளிக் செய்யவும்
-
உங்கள் முகம் / கைரேகை / PIN மூலம் விருப்பமான முறையை தேர்வு செய்யவும்.
இதன் பிறகு பாஸ்வேர்டு இல்லாமல் ஃபேஸ்புக் லாகின் செய்ய முடியும்.
பாஸ்கீ வேறு எங்கு பயன்படுத்தலாம்?
தற்போது பாஸ்கீ முறை ஃபேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் மெசேஞ்சர் மற்றும் மெட்டா பே ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் ஏற்கனவே வாட்ஸ்அப்பில் இந்த முறை இருக்கிறது.