இனி வாட்ஸ்அப் மூலம் இலவச சட்ட உதவி பெறலாம். வந்தாச்சு மத்திய அரசின் நியாய சேது சேவை – எப்படி பயன்படுத்துவது?
Nyaya Setu : எளிய மக்கள் இலவச சட்ட ஆலோசனை பெறும் வகையில் மத்திய சட்ட மற்றும் நிதித்துறை அமைச்சகம் நியாய சேது என்ற சேவையை வழங்கியுள்ளது. இந்த சேவையை வாட்ஸ்அப் மூலம் பெறலாம். அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
மத்திய அரசு பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கும் நோக்கில், ‘நியாய சேது’ (Nyaya Setu) என்ற புதிய சேவையை வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தொடங்கியுள்ளது. இந்த சேவை குறித்து மத்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நியாய சேது சேவையின் மூலம், பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்டத் தகவல்களை எளிதாக பெற முடியும். சிவில் சட்டம், குற்றவியல் சட்டம், குடும்பத் தகராறுகள், திருமண மற்றும் குடும்ப பிரச்னைகள், நிறுவன சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த சேவை வழிகாட்டுதல் வழங்கும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சேவை குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “சட்ட உதவி இப்போது எளிதாக கிடைக்கும். ‘நியாய சேது’ வாட்ஸ்அப்பின் மூலம் எளிதாக சட்ட ஆலோசனை பெறும் வாய்ப்பை மக்களிடம் கொண்டு வருகிறது. உங்கள் மொபைல் எண்ணை சரிபார்த்த பிறகு, ஒருங்கிணைந்த தளத்தில் சட்ட ஆலோசனைகள் மற்றும் தகவல்களை பெறலாம். இதன் மூலம், ஒவ்வொரு குடிமகனுக்கும் விரைவான மற்றும் எளிதான சட்ட உதவி கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம்.. பாரத் டாக்சியை அறிமுகம் செய்த மத்திய அரசு!
நியாய சேது பற்றிய அறிவிப்பு
Legal help is now just a message away!
Nyaya Setu brings ‘Ease of Justice’ directly to your WhatsApp. Simply verify your mobile number to access a unified interface for legal advice and information. This smart navigation ensures that professional legal assistance is always… pic.twitter.com/ZZBl6rgitA
— Ministry of Law and Justice (@MLJ_GoI) January 1, 2026
நியாய சேதுவை வாட்ஸ்அப்பில் எப்படி பயன்படுத்துவது?
இந்த சேவையை பயன்படுத்த, முதலில் 7217711814 என்ற எண்ணை வாட்ஸ்அப்பில் சேமிக்க வேண்டும். அந்த எண் ‘டெலி-லா’ (Tele-Law) என்ற பெயரில் தோன்றும். பின்னர், மொபைல் எண் சரிபார்ப்பு செய்த பிறகு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘நியாய சேது’ சாட்பாட்டை பயன்படுத்தி சட்ட ஆலோசனைகள் மற்றும் தகவல்களை பெறலாம்.
இந்த சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், சில பயனாளர்கள் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிலருக்கு சாட்போட் சரியாக செயல்படவில்லை என்றும், எரர் நோட்டிஃபிகேஷன் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவை இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘அரட்டை’ (Arattai) போன்ற செயலியில் இல்லாமல், வெளிநாட்டு நிறுவனமான வாட்ஸ்அப் ஏன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிக்க : புதிதாக பைக் வாங்கப்போறீங்களா?.. அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..
குடும்ப பிரச்சினைகளுக்கு முன்னுரிமை
இதனிடையே, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், நியாய சேது சேவையின் மூலம் குடும்பத் தகராறுகள், திருமண பிரச்னைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளித்து உதவி வழங்கப்படுவதாக உறுதி செய்துள்ளது. இந்த சேவையின் மூலம் எளிய மக்களுக்கும் சட்ட உதவி கிடைக்கும் என்பதில் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.


