சாட்ஜிபிடி டயட் டிப்ஸ் பின்பற்றிய முதியவருக்கு ஷாக்.. 19வது நூற்றாண்டு நோயால் பாதிப்பு!
ChatGPT Diet Advice Leads to Rare Disease | பெரும்பாலான நபர்கள் சாட்ஜிபிடியை பயன்படுத்தி தங்களது தனிப்பட்ட வாழ்கையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு கண்டு வரும் நிலையில், சாட்ஜிபிடியில் டயட் டிப்ஸ் பார்த்த முதியவருக்கு மிகவும் அரிதான 19வது நூற்றாண்டு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாட்ஜிபிடியின் (ChatGPT) உதவியுடன் சிலர் தங்களது உடல்நல சிக்கல்களுக்கு தீர்வு கண்டது, கடனை அடைக்க வழி கண்டுபிடித்தது உள்ளிட்ட வெற்றிக் கதைகளை பார்த்திருப்போம். ஆனால், சாட்ஜிபிடி மூலம் டயட் டிப்ஸ்களை பின்பற்றி உணவு உட்கொண்டு வந்த நபர் ஒருவருக்கு 19 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த உடல்நல குறைபாடு ஏற்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60 வயது முதியவர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக சாட்ஜிபிடியின் அறிவுரையின்படி உணவு உட்கொண்டுவந்த நிலையில், அவருக்கு இந்த உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடலுக்கு ஆபத்தாக மாறிய சாட்ஜிபிடியின் டயட் டிப்ஸ்
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அம்சத்தின் சாட்ஜிபிடியை பலரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்காக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் பலரும் தங்களது உடல்நல பிரச்னைகள் குறித்து தேடுவது, சரும ஆரோக்கியம் குறித்து தேடுவது, டயட் டிப்ஸ்கள் குறித்து தேடுவது உள்ளிட்டவற்றை செய்கின்றனர். அந்த வகையில் 60 வயது முதியவர் ஒருவர் டயட் டிப்ஸ் குறித்து சாட்ஜிபிடியில் தேடியுள்ளார். ஆனால், வழக்கத்திற்கு மாறாக முதியவருக்கு கூடுதலாக உடல்நல பிரச்னை ஒன்று வந்து சேர்ந்துள்ளது.
இதையும் படிங்க : செயற்கை நுண்ணறிவால் இந்த 10 வேலைகளை செய்ய முடியாது.. மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட பட்டியல்!




சோடியம் குளோரைடுக்கு பதிலாக சோடியம் புரோமைடு பயன்படுத்த சொன்ன சாட்ஜிபிடி
முதியவர் டயட் குறித்து சாட்ஜிபிடியில் தேடிய போது அது அவரை சோடியம் குளோரைடுக்கு பதிலாக சோடியம் புரோமைடு பயன்படுத்த கூறியுள்ளது. இந்த சோடியம் புரோமைடு நீச்சல்குளங்களை தூய்மை படுத்துவதற்கும், காய்கறிகளை பதப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும். எந்த விதமான பெரிய உடல்நல சிக்கல்கள் இல்லாத அந்த முதியவர் சாட்ஜிபிடியின் அறிவுரையின்படி, ஆன்லைனில் சோடியம் புரோமைடு வாங்கி மூன்று மாதங்களாக தனது உணவில் பயன்படுத்தி வந்துள்ளார்.
உடலநல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர்
சாட்ஜிபிடியின் அறிவுரையின் படி உணவு சாப்பிட்ட வந்த அந்த முதியவருக்கு திடீரென உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது முதியவர் தனது பக்கத்து வீட்டுக்காரர்கள் தனக்கு விஷம் வைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், முதியவரின் ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். அப்போது முதியவருக்கு அசாதாரனமான எலக்ட்ரோலைட் அளவு இருந்துள்ளது.
இதையும் படிங்க : ஏஐ உடன் 5 மாத காதல்… நிச்சயதார்த்தம் முடிந்தது – அதிர்ச்சியளித்த பெண்!
இதன் காரணமாக முதியவருக்கு புரோமிசம் பாதிப்பு இருக்கலாம் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர். அதன்படி மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில் அவருக்கு புரோமிசம் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த புரோமிசம் பாதிப்பு 19வது நூற்றாண்டில் பொதுமக்கள் மத்தியில் பரவலாக இருந்த பாதிப்பாகவும், தற்போது மிகவும் அரிதாக இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.