அஜித்குமார் மரணம்: புகார்தாரர் நிகிதாவை கைது செய்ய வாய்ப்பு?
Ajith Kumar Death Case: அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய நபராக இருக்கும் நிகிதா, கோவை மாவட்டத்தில் உள்ளார். நிகிதா மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளதாகவும், தற்போது கோவையில் ஒளிந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் கைது செய்யப்படலாம் என செய்திகள் பரவுகிறது.

நிகிதா
கோவை ஜூலை 04: அஜித்குமார் (Ajithkumar) மரண வழக்கில், புகார்தாரரான நிகிதா முக்கியக் குற்றவாளி எனக் கருதப்படுகிறார். திருப்புவனத்தில் தனது நகை மற்றும் பணம் தொலைந்ததாக கூறி புகார் அளித்த நிகிதா காரணமாக, காவலாளி அஜித்குமார் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். நிகிதா மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளதாகவும், தற்போது கோவையில் ஒளிந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், தான் ஒளியவில்லை எனக் கூறி வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார். மரண வழக்கில் முக்கிய திருப்பமாக அவரது கைது அமைய வாய்ப்பு உள்ளது.
புகார்தாரர் நிகிதாவை கைது செய்ய வாய்ப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் உயிரிழந்த வழக்கில், முக்கியப் புகார்தாரரான நிகிதா கைது செய்யப்படலாம் என்பதால் அவர் கோவை மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்குமார் மரணத்திற்குக் காரணமானதாகக் கருதப்படும் நிகிதா, தற்போது காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.
சம்பவத்தின் பின்னணி: காவலாளி மரணம் மற்றும் காவல் துறையினர் கைது
ஜூன் 27 ஆம் தேதி, திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சாமி கும்பிட வந்த மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா, தனது காரை நிறுத்துமாறு காவலாளி அஜித்குமாரிடம் (27) சாவியைக் கொடுத்துள்ளார். கார் ஓட்டத் தெரியாத அஜித்குமார், மற்றொருவரின் உதவியுடன் காரைப் நிறுத்தி சாவியை நிகிதாவிடம் திருப்பி அளித்துள்ளார்.
கோவையில் சுற்றித்திரியும் நிகிதா
பின்னர், நிகிதா காரில் ஏறியபோது, தனது பையில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.2,200 காணவில்லை எனப் புகார் அளித்தார். இந்தக் குற்றச்சாட்டின் பேரில், திருப்புவனம் போலீஸார் அஜித்குமார் உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்தினர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அஜித்குமார் மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நிகிதா மீதான குற்றச்சாட்டுகளும், தலைமறைவு முயற்சிகளும்
அஜித்குமார் மரணத்திற்குக் காரணமானவர்களில் நிகிதா முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு உயர் அதிகாரியின் தூண்டுதலின் பேரிலேயே போலீசார் அஜித்குமாரைத் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில், நிகிதா மீது பல்வேறு புகார்கள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாகவும், அவரே பலரை ஏமாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, காவல்துறையினர் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், தான் எங்கும் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை எனத் தெரிவித்து ஒரு வீடியோவை நிகிதா வெளியிட்டுள்ளார்.
தேநீர் விடுதியில் நிகிதா
சமீபத்தில், கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல தேநீர் விடுதியில் நிகிதா தனது தாயார் மற்றும் கார் ஓட்டுநருடன் இருந்ததை ஒருவர் தனது செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார். அந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. தகவல் அளித்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்றும், சுமார் 2 மணி நேரம் அங்கு அமர்ந்திருந்த நிகிதா பின்னர் கோவையை நோக்கிச் சென்றுள்ளதாகவும் தெரிகிறது.