மத்திய பட்ஜெட் 2026.. தமிழகத்திற்கு எந்த புதிய திட்டமும் இல்லை.. அரசியல் தலைவர்கள் விமர்சனம்!!
Union Budget 2026: கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏன் வெளியிடவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பட்ஜெட்டை வரவேற்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் 2026..
2026- 2027 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்திற்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், தமிழகத்திற்கு சில திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை – பெங்களூர் இடையேயும், சென்னை – ஐதராபாத் இடையேயும் புதிய அதிவேக ரயில் தடம் அமைக்கப்படும், ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம், பொதிகை மலையில் மலையேற்ற திட்டம், பழவேற்காட்டி ஏரியில் பறவைகளை காண பிரத்யேக காட்சி மையம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் கனிம வள மையம் அமைக்கப்படும்.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு!
மத்திய பட்ஜெட் ஏமாற்றம்:
மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். அதோடு, நமது வளங்களை சுரண்டுவதற்குத்தான் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாகவும், தமிழ்நாட்டின் அரிய வகை கனிம வளங்களை சூறையாட தனி வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து வகையிலும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளதாகவும் சாடியுள்ளார். அதோடு, திருக்குறள், சங்க இலங்கியங்கள் கூட இந்த பட்ஜெட்டில் இல்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் வரவேற்பு:
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வழிகாட்டுதலின் படி, நமது தலைநகர் சென்னையை ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுடன் இணைத்து, ரயில் பயணத்தை எளிதாக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடச் சேவையை அறிவித்துள்ள மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி.… https://t.co/2C2jgD6ha5
— Nainar Nagenthran (@NainarBJP) February 1, 2026
அதேசமயம், இந்த பட்ஜெட்டை வரவேற்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பதிவில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் படி, நமது தலைநகர் சென்னையை ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுடன் இணைத்து, ரயில் பயணத்தை எளிதாக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடச் சேவையை அறிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரியளவில் எந்த தகவலும் இல்லை:
இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் பேசுகையில், என்னை பொறுத்தவரை இது நிதியமைச்சர் பேச வேண்டிய பட்ஜெட் அல்ல. ஒரு ஐஏஎஸ் அதிகாரி பேசிய உரை போல் அமைந்தது. இந்த பட்ஜெட்டில் பெரியளவில் எந்த தகவலும் இல்லை. இந்தியாவில் கட்டுமான துறைதான் அதிக வேலைவாய்ப்பை கொடுத்து வருகிறது. அதனைப் பற்றியும் பேசியதை போல் தெரியவில்லை. இந்த பட்ஜெட் உரைக்கு முன் பாசிட்டிவாக இருந்த பங்குச்சந்தை புள்ளிகள், தற்போது கீழே இறங்கிவிட்டது. தமிழ்நாட்டிற்கு ஆதிச்சநல்லூர் சுற்றுலாவுக்கு உதவி செய்வோம் என்று கூறி இருக்கிறார்கள். அதனை தவிர, தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை என்றும் சாடியுள்ளார்.
மாநில அரசுகளுக்கு ஏமாற்றம்:
மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சித்துள்ளார். 16வது நிதி ஆணையத்தின் பரிந்துரை மாநில அரசுகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்காகக் கூட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு அறிவுப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
உத்வேகம் அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை:
மத்திய அரசின் பட்ஜெட்டில் உத்வேகம் அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டம் உட்பட முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் நிர்மலா சீதாராமன் உரையில் எதுவும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.