ஈரோட்டில் இன்று தவெக பொதுக்கூட்டம்.. மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார் விஜய்
TVK Vijays public meeting in Erode: இதற்காக அவரது பிரச்சார பேருந்து நேற்றைய தினமே பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. அதில், இருந்தபடி தான் விஜய் பேச உள்ளார். தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், தொண்டர்கள் சீரான முறையில் மைதானத்தை அடையவும் மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தவெக தலைவர் விஜய்
ஈரோடு, டிசம்பர் 18: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இன்று (டிசம்பர் 18) தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பில் பிரமாண்ட மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அக்கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்வை முன்னிட்டு அப்பகுதியில் விரிவான போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்திற்கு பின்னர் ஒரு மாதம் வீட்டிலேயே முடங்கியிருந்தார். தொடர்ந்து, அவரது பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதிலும் சிக்கல் நிலவியது. இந்நிலையில், கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றினார். இதன் மூலம் இரண்டரை மாதத்திற்கு பின்னர் அவர் தமிழகத்தில் இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்…தவெக-பாஜகவுக்கு…வைகோ மறைமுக எச்சரிக்கை!
காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம்:
இதன் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் இன்று விஜய் பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டம், முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இன்றைய பொதுக்கூட்டத்திற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பெரிய மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்த வசதிக்காக 60 ஏக்கர் பரப்பளவில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கும், மேலும் 20 ஏக்கரில் இருசக்கர வாகனங்களுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
விஜய் சென்னையிலிருந்து விமானத்தில் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் நேரடியாக பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார். பின்னர் அவரது பிரச்சார வாகனத்தில் நின்று மக்களை சந்தித்து உரையாற்ற உள்ளார். இதற்காக அவரது பிரச்சார பேருந்து நேற்றைய தினமே பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், தொண்டர்கள் சீரான முறையில் மைதானத்தை அடையவும் மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுகூட்டத்திற்கு கடும் கட்டுப்பாடு:
பொதுக்கூட்டத்தின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்யும் வகையில், ஈரோடு மாவட்ட காவல்துறை கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலும், முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் வழிகளிலும் உள்ள மரங்கள், மின்கம்பங்கள், விளம்பர பதாகைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் மீது ஏறி நிற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். முக்கிய நபர்கள் பயணிக்கும் வாகனங்களை பின்தொடருதல், அருகில் சென்று செல்பி எடுப்பது போன்ற செயல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் கூரை மீது அமர்ந்தோ அல்லது நின்றோ பயணம் செய்யக் கூடாது என்றும், வாகன எண் பலகைகளை மறைத்து கட்சிக் கொடிகளை கட்டிக்கொண்டு வருவதும் அனுமதிக்கப்படாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ஜனவரி முதல் வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டசபை.. பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்!!
1,500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு:
பாதுகாப்பு ஏற்பாடாக, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மைதானம் முழுவதும் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குடிநீர் வசதிக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், நடமாடும் குடிநீர் விநியோகமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை கருத்தில் கொண்டு, விஜயமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 8 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று மூட உத்தரவிடப்பட்டுள்ளது.