ஈரோட்டிற்கு விஜய் வருகை.. பலத்தை காட்டும் செங்கோட்டையன்.. காலையிலேயே குவியும் மக்கள்!!
Tvk Vijay's Erode visit: விஜய் பொதுக்கூட்டம் என்றாலே கூட்டம் கூடும், அத்துடன் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர் தனது பலத்தை நிரூபிக்க வகையில் இதில் இணைந்துள்ளதால், விஜயமங்கலத்தில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் சாரை சாரைய் வந்த வண்ணம் உள்ளனர்.

காலையிலேயே குவியும் தொண்டர்கள்
ஈரோடு, டிசம்பர் 18: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெறும் பிரமாண்ட மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில், விஜய் கலந்து கொண்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்திற்கான நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 6 மணிக்கெல்லாம் அப்பகுதி மக்கள் அலைகடலென திரண்டு குவிந்து வருகின்றனர். தொடர்ந்து, அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்குள் முதல் ஆளாக புகுந்துவிட வேண்டுமென முனைந்துள்ளனர். எனினும், அவர்களுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிகிறது. ஆனால், போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்காத அவர்கள் தடுப்புகளை தாண்டி, ஏறி குதித்து உள்ளே சென்று வருகின்றனர். இதனால், போலீசார் காலையிலேயே அங்கு லேசான தடியடி நடத்தியுள்ளனர்.
இதையும் படிக்க : இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு? – முதல்வர் ஸ்டாலின் காட்டம்..
6 மணிக்கே அலைகடலென திரண்ட கூட்டம்:
தொடர்ந்து, அங்கு காலை உணவு போன்ற எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் காலை 6 மணி முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்குள் விஜய்யின் வருகைக்காக காத்திருந்து வருகின்றனர். கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று கூறிய போதும், பலர் கைக்குழந்தைகளுடன் வந்தனர். இதையடுத்து, தவெக நிர்வாகிகளே அவர்களை மைதானத்திற்குள் அனுமதிக்காமல் திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் மைதானத்திற்கு வருகை தந்து ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
பலத்தை காட்டும் செங்கோட்டையன்:
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் ஒரே மாதத்தில் அதிரடி முடிவெடுத்து தவெகவில் இணைந்தார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் செயல்பட்டு வந்த அவர், எந்த முன்னறிவிப்புமின்றி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், அவர் கடும் மன உளைச்சலில் இருந்தார். தொடர்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக தவெகவில் இணைந்த அவர், உடனடியாக தனது சொந்த ஊருக்கு விஜய்யை அழைத்து வந்து பிரசாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம் தனது பலத்தை அதிமுகவுக்கு காட்டும் விதமாக அவர் அனைத்து ஏற்பாடுகளையும் அவரே மேற்கொண்டு பிரம்மாண்டமாக பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க : 2026 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு – தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்ன?
பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்:
விஜய் பொதுக்கூட்டம் என்றாலே கூட்டம் கூடும், அத்துடன் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர் தனது பலத்தை நிரூபிக்க வகையில் இதில் இணைந்துள்ளதால், விஜயமங்கலத்தில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் சாரை சாரைய் வந்த வண்ணம் உள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் 30,000 பேர் வரை கலந்துக்கொள்வார்கள் என கூறப்பட்ட நிலையில், அதற்கும் மேலாக தான் மக்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. கரூர் சம்பவம்போல், எதுவும் நடந்துவிடாமல் இருக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.