ஈரோடு செல்லும் விஜய்…தேதி…நேரம்…குறித்த செங்கோட்டையன்!
Vijay Public Meeting In Erode: ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டம் தொடர்பான நாள் மற்றும் நேரம் குறித்து அந்தக் கட்சியின் மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம்
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான கே. ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகிற டிசம்பர் 18- ஆம் தேதி வரலாற்று நாயகன், தமிழக மக்களால் போற்றப்படுகிற , ஒரு மாற்றத்தை உருவாக்குகிற, மக்கள் சக்தியாக இருக்கக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் வழங்கும் ஆலோசனையின் அடிப்படையில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த தயாராக உள்ளோம்.
வரலாறு படைக்கு நிகழ்ச்சியாக ஈரோடு நிகழ்ச்சி அமையும்
ஈரோட்டில் நடைபெறும் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக அமையும். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை ஏற்று கூட்டணிக்கு வரும் எந்த கட்சியாக இருந்தாலும் அதனை அரவணைத்து செல்வதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில், யார் யாரை கூட்டணிகள் சேர்க்க வேண்டும் என்பதை தலைவர் விஜய் முடிவு எடுப்பார். ஈரோட்டில் கூட்டம் நடத்துவதற்கான எந்த தடையும் விதிக்கப்படவில்லை. தற்போது, வரை அதற்கான எந்த நோட்டீசும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வரவில்லை.
மேலும் படிக்க: மத்திய கைலாஷில் மேற்கொள்ளப்படும் மேம்பால பணிகள்.. 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..
எனது விருப்பத்தின் பேரில் தவெகவில் ஐக்கியம்
நான் அதிமுகவிலிருந்து விலகி, எனது விருப்பத்தின் அடிப்படையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளேன். என்னை வரவேற்கிற, அரவணைக்கிற இயக்கத்தில் சேர்ந்ததில் எந்த தவறும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு கூறி பாமகவின் ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்பது தொடர்பாக கட்சியின் தலைமை முடிவு செய்யும்.
அதிமுகவில் இருந்தது போல தவெகவிலும் வரவேற்பு
அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களான எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் எப்படி எனக்கு வரவேற்பு இருந்ததோ, அதே போல தான் தமிழக வெற்றிக் கழகத்திலும் எனக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோயில் விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடிதம் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், நேரடியாக காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கான நிலம் முழுவதும் கோயில் வசம் இருப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் படிக்க: எஸ்ஐஆர்-இல் மீண்டும் குளறுபடி…ஆள் இல்லாத கிராமத்தில் 800 பேர் இருப்பதாக பதிவு!