விஜய் எடுத்த அதிரடி முடிவு.. நாளை காஞ்சிபுரத்தில் மக்களை சந்திக்கிறார்!!
கரூர் துயர சம்பவத்தால் முடங்கி இருந்த விஜய், நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அந்தவகையில், நாளை நடக்கும் நிகழ்வில் கட்சி நிர்வாகிகளுடன், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர். எனினும், குறிப்பிட்ட அளவிலேயே மக்களை அனுமதிக்க திட்டமிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, நவம்பர் 22: தவெக தலைவர் விஜய் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் சிறப்பு மக்கள் சந்திப்பை நடத்த முடிவு செய்துள்ளார். முன்னதாக, சட்டமன்ற தேர்தலையொட்டி, விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்து, வார இறுதிகளில் பயணம் மேற்கொண்டு வந்தார். அந்தவகையில், கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதை விஜய் தவிர்த்து வந்தார். குறிப்பாக ஒரு மாத காலம் அரசியல் நகர்வுகள் எதுவும் மேற்கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை கரூரில் இருந்து சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
கரூர் நிகழ்வுக்கு பிறகு அதிரடி காட்டும் விஜய்:
இதைத்தொடர்ந்து, கரூர் நிகழ்வில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த அவர், முடங்கி இருந்த கட்சிப் பணிகளை மீண்டும் தொடங்கினார். தொடர்ந்து, திமுகவை முன்பு எதிர்த்ததை விட தீவிரமாக எதிர்த்து, விமர்சிக்க தொடங்கினார். அறிக்கை மூலமும், வீடியோ வெளியிட்டும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வந்தார். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளை அதிரடியாக மாற்றினார், அனைவரும் தனது உத்தரவின் கீழ் செயலாற்றுவார்கள் என முழு அதிகாரத்தையும் தானே எடுத்துக்கொண்டார். அதோடு, கட்சியின் சிறப்பு பொதுக்குழுவையும் கூட்டினார். அதில், பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்த அவர், மீண்டும் மக்களை சந்திக்க ஆயத்தமானார்.




விஜய்க்கு பாதுகாப்பு வழங்க பயிற்சி:
இதையொட்டி, மாநிலம் முழுவதும் இருந்து 4,000 பேரைத் தேர்வு செய்து ‘மக்கள் பாதுகாப்புப் படை’ என்ற அமைப்பை உருவாக்கினார். ராணுவம் மற்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிபுணர்களை கொண்டு இந்த குழுவினருக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சிகள் சென்னைக்கு அருகிலுள்ள செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் தினமும் சுமார் 100 பேருக்காக நடைபெற்று வருகின்றன.
டிச.4ல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்ட விஜய்:
இதனிடையே, டிசம்பர் 4ம் தேதி முதல் சேலத்தை மையமாகக் கொண்டு மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்க விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்கான மூன்று இடங்களை தேர்வு செய்து போலீசாரிடம் அனுமதிக்கோரியிருந்தார். எனினும், திருக்கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சிக்கல் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன், வேறு தேதிகளை தேர்வு செய்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டது.
நாளை காஞ்சிபுரத்தில் மக்களை சந்திக்கிறார்:
இதனிடையே, விஜய் நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் சிறப்பு மக்கள் சந்திப்பை நடத்த தீர்மானித்துள்ளார். இந்த சந்திப்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர். காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கட்சித் தரப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : +2 மாணவி கொலை: “பெயரை பச்சை குத்தியுள்ளேன்”.. கைதான இளைஞர் பகீர் வாக்குமூலம்!!
பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்:
குறிப்பாக இக்கூட்டத்தற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தொண்டர் படையுடன் சேர்ந்து மக்கள் பாதுகாப்புப் படையும் ஏற்பாடுகளை கவனித்து வருகிறது. கல்லூரி வளாகத்தின் உள் அரங்கில் போதுமான இருக்கைகள் அமைத்தல், தடுப்பு வேலிகள் பொருத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் முறையான கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும் என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.