தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு
Vijay Supports Sanitation Workers’ Protest: ராயபுரம், திருவிக நகர் திடக்கழிவு மேலாண்மையை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சியின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் 11 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் (Greater Chennai Corporation) திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் (Sanitation Workers Protest) நாட்களுக்கும் மேலாக பாராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மையை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் நகராட்சியின் முடிவுக்கு எதிராக, கடந்த ஆகஸ்ட் 1, 2025 அன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
துாய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு விஜய் ஆதரவு
தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் விஜய்யை சந்தித்தனர். அப்போது அவர்களின் போராட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் என ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : தூய்மைப் பணியாளர்கள் 10 நாள் போராட்டம்.. தனியார்மயமாக்கல் அவசியம் ஏன்..? சீமான் கேள்வி!




முன்னதாக அவர்களது போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தகைள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பாடகி சின்மயி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாடகி சின்மயி சுமார் 500 பாட்டில் தண்ணீர் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தனது ஆதரவை வழங்கினார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்தவித தீர்வும் எட்டப்படாத நிலையில் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் தமிழக முதல்வர் தலையிட்டு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தூய்மை பணியாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இதையும் படிக்க : தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் – சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் சண்முகம்..
மக்களின் கோரிக்கை
தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது எனவும் இதனால் தொற்று நோய் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் தூய்மை பணியாளர்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.