“தமிழகத்தை ஆளப்போவது விஜய்”.. செங்கோட்டையன் ஈரோட்டில் பேச்சு!
சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன்
ஈரோடு, டிசம்பர் 18: நாளை தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான் என ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியுள்ளார். கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கான நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 6 மணிக்கெல்லாம் அப்பகுதி மக்கள் அலைகடலென திரண்டு குவிந்தனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் ஒரே மாதத்தில் அதிரடி முடிவெடுத்து தவெகவில் இணைந்தார்.
இதையும் படிங்க : 2026 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு – தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்ன?
பலத்தை நிரூபித்த செங்கோட்டையன்:
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் செயல்பட்டு வந்த அவர், எந்த முன்னறிவிப்புமின்றி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், அவர் கடும் மன உளைச்சலில் இருந்தார். தொடர்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக தவெகவில் இணைந்த அவர், உடனடியாக தனது சொந்த ஊருக்கு விஜய்யை அழைத்து வந்து பிரசாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம் தனது பலத்தை அதிமுகவுக்கு காட்டும் விதமாக அவர் அனைத்து ஏற்பாடுகளையும் அவரே மேற்கொண்டு பிரம்மாண்டமாக பொதுக்கூட்டத்தை நடத்தினார்.
புரட்சி தளபதி விஜய்:
பெருந்துறையில் பொதுக்கூட்ட மைதானத்தில் தவெகவின் பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பேசிய அவர், பெரியார் பிறந்த மண்ணிற்கு விஜய் வருகை தந்துள்ளார். ரூ.500 கோடி வருமானத்தை உதறிவிட்டு, மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளார். வரலாறு படைக்க பெருந்திரளாக கூட்டம் கூடியுள்ளது என்றார். விஜய் மனிதநேயம் மிக்கவர் என்றும் தவெகவை 234 தொகுதியிலும் வெற்றி பெறும் என்றும் உறுதி தெரிவித்தார்.
மேலும், கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும் போது, நாளை தமிழகத்தின் முதல்வர் இவர் தான் என வரலாறு படைக்கும் என்பது போல் உள்ளது. இதற்கு முன் புரட்சித்தலைவரைப் பார்த்தேன்; இன்றைக்கு புரட்சி தளபதி விஜய்யை காண்கிறேன். நாளை தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான் என்றும் கூறினார்.
நிரம்பி வழிந்த மைதானம்:
முன்னதாக, சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர். தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு வருகை தந்த அவருக்கு, தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது.
இதையும் படிக்க : இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு? – முதல்வர் ஸ்டாலின் காட்டம்..
விஜய்யை காண காலை முதல் காத்திருந்த தொண்டர்கள்:
அங்கு காலை உணவு போன்ற எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் காலை 6 மணி முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்குள் விஜய்யின் வருகைக்காக காத்திருந்தனர். கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று கூறிய போதும், பலர் கைக்குழந்தைகளுடன் வந்தனர். இதையடுத்து, தவெக நிர்வாகிகளே அவர்களை மைதானத்திற்குள் அனுமதிக்காமல் திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் மைதானத்திற்கு வருகை தந்து ஏற்பாடுகளை கவனித்தனர்.