தவெக நிர்வாகக் குழுக் கூட்டம்: ஒரு மாதத்திற்கு பின் கட்சி செயல்பாடுகளில் மும்முரம் காட்டும் விஜய்!
TVK Executive Committee Meeting: கரூர் துயரச் சம்பவத்தால் கடந்த ஒரு மாதமாக முடங்கி இருந்த தவெக, மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. அந்தவகையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இனி அக்கட்சியின் செயல்பாடுகள் வேகமாக இருக்கும் என்றும் திமுகவை எதிர்ப்பதில் மேலும் தீவிரம் காட்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சென்னை, அக்டோபர் 29: சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்சி பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை விஜய் அறிவித்த கையோடு, இந்த நிர்வாகக் குழு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மரிய வில்சன் உள்ளிட்டோர் கொண்ட இந்த புதிய நிர்வாகக் குழுவானது தனது வழிகாட்டுதல்படி இயங்கும் என்றும், அனைவரும் இக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக்கொண்டார். அதன்படி, தற்போது நடந்த வரும் இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




ஒரு மாதமாக முடங்கிய விஜய்:
கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து தவெக அதன் அரசியல் நடவடிக்கைகளை கடந்த ஒரு மாதமாக முற்றிலும் முடக்கி வைத்திருந்தது. இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகளும் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி குழம்பி இருந்தனர். 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து விட வேண்டுமென எண்ணிய விஜய், கரூர் செல்ல உரிய அனுமதி கிடைக்காததால் செய்வதறியாது திகைத்தார். தொடர்ந்து, வேறு வழியின்றி பாதிக்கப்பட்டவர்களை சென்னை அழைத்து வந்து ஆறுதல் கூறினார்.
Also read: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்துக் கட்சிகளுடன் இன்று தேர்தல் அதிகாரி ஆலோசனை
அதோடு, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக தான் எப்போதும் உடன் இருப்பேன் என்றும், சூழ்நிலை சீரானது கரூருக்கு நேரில் வந்து சந்திப்பதாகவும் அவர் உறுதி தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சொந்த வீடு, நிதி உதவி, மருத்துவ காப்பீடு, குழந்தைகளின் கல்விச் செலவுத் தேவை என ஒவ்வொருவரின் தேவையை தானே கேட்டறிந்து எழுத்துப்பூர்வமாக பெற்றுக்ககொண்டுள்ளார்.
வேகமெடுத்த தவெக அரசியல் செயல்பாடு:
— TVK Vijay (@TVKVijayHQ) October 28, 2025
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நன்றாக இருக்காது என்று எண்ணிய விஜய், கடந்த ஒரு மாதமாக கட்சி நடவடிக்கைகளை முடக்கி வைத்திருந்ததாகத் தெரிகிறது. சரியாக மகாபலிபுரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய மறுநாள், திமுகவை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், விளம்பரத்திற்காக தானும் டெல்டாகாரன் என ஸ்டாலின் பேசி வருவதாகவும், மழையில் நெற்பயிற்கள் வீணாணது குறித்தும் வேதனை வெளிப்படுத்தியிருந்தார். அதோடு, மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல, மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
Also read: TVK Vijay: அன்றாட பணிகளை கவனிக்க தனிக்குழு.. புது வியூகம் வகுக்கும் தவெக தலைவர் விஜய்..!
விஜய் மீண்டும் சுற்றுப்பயணம்?:
மேலும், திமுவை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, தவெக கட்சிக்கு புதிய நிர்வாகக் குழுவையும் அமைத்து தனது வழிகாட்டுதல்படி அக்குழு இயங்கும் என்றும் விஜய் அறிவித்தார். சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இதனை தொடங்கி, சில இடங்களுக்கு சென்று வந்த நிலையிலேயே, கரூர் துயரச் சம்பவம் நிகழ்ந்து அந்த பயணத்திற்கு முடிவு கட்டிவிட்டது. இந்நிலையில், மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குவது, தேர்தல் பணிகளில் காட்ட வேண்டிய மும்முரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்றைய நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.