காரில் கடத்தப்பட்ட ஃபைனான்சியர் … சினிமா பாணியில் துரத்தி பிடித்த காவல்துறை – பரபரப்பு சம்பவம்
Villupuram Kidnap : விழுப்புரம் அருகே ஃபைனான்சியர் ஒருவர் 7 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், பைனான்சியரை கடத்திய காரை துரத்திபிடித்து அவரை மீட்டனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் அக்டோபர் 29: விழுப்புரம் (Viluppuram) மாவட்டம் மேல்மலையனூர் அருகே காரில் கடத்தப்பட்ட ஃபைனான்சியரை, காவல்துறையினர் சினிமா பாணியில் துரத்தி சென்று மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மதுரையைச் (Madurai) சேர்ந்த ஏழு பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள வாலதி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவர் மதுரையில் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து விழுப்புரம் வந்த அவர் தனது சொந்த ஊரில் தொழில் செய்து வந்திருக்கிறார். மதுரையில் அவர் தொழில் செய்து வந்த போது கொடுத்தல் வாங்கல் தொடர்பாக சிலருடன் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
காரில் கடத்தப்பட்ட ஃபைனான்சியர்
இந்த நிலையில் அக்டோபர் 28, 2025 அன்று காலை, வாலதி கிராமத்தில் உள்ள சிவாவின் வீட்டுக்கு வந்த 7 பேர், அவருடன் ஃபைனான்ஸ் பிரச்னை குறித்து பேசுவதற்காக அழைத்திருக்கின்றனர். ஆரம்பத்தில் அவருடன் அமைதியான முறையில் பேசிய அவர்கள், அவரை தங்கள் வந்த காரில் அழைத்து சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், சிவாவை அந்த கும்பல் கடத்தியதா கூறப்படுகிறது. காரில் சிவாவின் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : 16 வயது மாணவனை திருமணம் செய்த பெண்… 3 மாத கர்ப்பம்… போக்சோவில் கைது




இதனையடுத்து தகவலறிந்து வந்த வாலதி காவல்துறையினர், விழுப்புர மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சிவா கடத்தி செல்லப்பட்ட காரை, கண்டறிந்த காவல்துறையினர் அவரது காரை தங்கள் வந்த போலீஸ் வாகனத்தில் துரத்தி சென்றனர். இதனால் பதட்டமடைந்த கார் ஓட்டுநர் விழுப்புரம் ரயில்வே சிக்னல் அருகே எதிர்திசையில் வந்த 6 பைக்குகள் மீது மோதினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.
சினிமா பாணியில் துரத்திப்பிடித்த காவல்துறையினர்
காவல்துறையினர் விடாமல் துரத்திய நிலையில், ஒருகட்டத்தில் பயந்து போன கடத்தல்காரர்கள் சிவாவை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் பாலம் அருகே இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து சிவாவை மீட்ட காவல்துறையினர் அவரை செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : சென்னையில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார் – பரபரப்பு சம்பவம் – என்ன நடந்தது?
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சிவாவை காரில் கடத்திய மதுரையைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.