சென்னையில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார் – பரபரப்பு சம்பவம் – என்ன நடந்தது?
Fire Accident : சென்னை பெசண்ட் நகர் அருகே நள்ளிரவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. கார் ஓட்டுநர் உடனடியாக காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை, அக்டோபர் 28: சென்னை (Chennai) பெசன்ட் நகரில் அக்டோபர் 28, 2025 அன்று இரவு நடந்த கார் தீ விபத்து அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியடையச் செய்தது. பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரில் (Car) இருந்து புகை வந்துள்ளது. வாகன ஓட்டிகள் எச்சரிப்பதற்குள் திடீரென எஞ்சின் பகுதியில் இருந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பீதியடைந்த காரில் பயணித்தவர்கள் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, அதிலிருந்து கீழே இறங்கி தப்பினர். சிறிது நேரத்திற்குள் காரில் மளமளவென எரிந்து கார் முற்றிலும் நாசமானது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரங்கள் பரபரப்பு நிலவியது.
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து
பெசண்ட் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த காரின் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட தீ, சில நிமிடங்களிலேயே முழு காரையும் சூழ்ந்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : தமிழக்தில் சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்




பெரும் விபத்து தவிர்ப்பு
நள்ளிரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் பெரும் புகை சூழ்ந்த காரணத்தால் வாகன போக்குவரத்து சில நேரம் பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை முழுமையாக அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக, காரில் இருந்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து பெசன்ட் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து எஞ்சின் கோளாறு காரணமாக ஏற்பட்டதா அல்லது மின் கசிவு காரணமாகவா என்பது குறித்து போலீசார் தீயணைப்பு துறையினருடன் இணைந்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க : அதிகாலையில் நடந்த கொடூரம் – ஒன்றன்பின் ஒன்றாக மோதிய வாகனங்கள்… சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி
சமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி 41 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏர்படுத்தியது. ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது சரியாக அதிகாலை 3.30 மணியளவில் பைக் ஒன்றின் மீது பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக, என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ, சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் சூழ்ந்தது. தீயின் காரணமாக ஏற்பட்ட கரும்புகையினால் பயணிகளால் வெளியே வர முடியவில்லை. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.