மிட்டாய் வாங்கி தருவதாக மகள்களை அழைத்துச் சென்ற தந்தை.. அடுத்து நடந்த கொடூரம்.. பகீர் சம்பவம்!
Father and Daughters Found Dead in Vaigai Dam | தேனி மாவட்டம் பெரிய குளம் பகுதியில் தனது மகள்களுடன் காணாமல் போன நபர், வைகை அணையில் மகள்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிப்பட்டி, அக்டோபர் 27 : தேனி (Theni) மாவட்டம், பெரியகுளம் பகுதியில் உள்ள வடகரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு திருமணமாகி பிரியங்கா என்ற மனைவியும், தாரா ஸ்ரீ மற்றும் தமிழிசை என 7 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி அக்டோபர் 25, 2025 என்று தனது இரண்டு மகள்களுடன் மாயமாகியுள்ளார்.
இரண்டு குழந்தைகளுடன் மாயமான கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி அக்டோபர் 25, 2025 என்று தனது இரண்டு மகள்களையும் மிட்டாய் வாங்கி தருவதாக வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, கடைக்கு சென்ற தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளையும் எங்கு தேடியும் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மகள்களுடன் காணாமல் போன கிருஷ்ணமூர்த்தியை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : அதிகரிக்கும் இரிடியம் மோசடி.. சிபிசிஐடி அதிரடி சோதனை.. 50 பேர் கைது
சடலமாக மீட்கப்பட்ட சிறுமிகள்
இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 26, 2025) காலை இரண்டு சிறுமிகள் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுமிகளின் தாயை வரவழைத்து அவர்கள் காணாமல் போன சிறுமிகள் தான் என்பதை உறுதி செய்துள்ளனர். அதனை தொடர்ந்து சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு.. தென்காசியில் நடந்த அதிர்ச்சி..
சிறுமிகள் தந்தையுடன் சென்ற நிலையில் கிருஷ்ணமூர்த்தியை காணவில்லை என்பதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்ட அதே நீர்தேக்க பகுதியில் இறங்கி தேட தொடங்கியுள்ளனர். அப்போது கிருஷ்ணமூர்த்தியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
மகள்களுடன் வைகை அணையில் குதித்து தற்கொலை
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், கிருஷ்ணமூர்த்தி தனது இரண்டு மகள்களுடன் வைகை அணையில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அவர் எதற்காக மகள்களுடன் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



