Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thanjavur: லண்டன் பார்சல்.. தஞ்சை பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி!

தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் அரசு ஊழியரிடம், லண்டனில் இருந்து பரிசுப் பொருட்கள் வருவதாக நம்பவைக்கப்பட்டு, போலியான சுங்கவரி, அபராதக் கட்டணங்கள் என கூறி ரூ.47 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் கல்லூரி தோழி என நடித்து வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளது தெரிய வந்தது.

Thanjavur: லண்டன் பார்சல்.. தஞ்சை பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி!
லண்டன் பார்சல் மோசடி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 24 Oct 2025 11:36 AM IST

தஞ்சாவூர், அக்டோபர் 22: தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற அரசு பெண் ஊழியரிடம் லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி ரூ. 47 லட்சம் பண மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவ கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்த 64 வயது பெண் ஒருவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி வெளிநாட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர், தான் உன்னுடன் கல்லூரியில் படித்த  தோழி என்றும், தற்போது லண்டனில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். முதலில் யார் என தெரியாமல் குழப்பமடைந்த நிலையில், கல்லூரி காலகட்டத்தில் தன்னுடன் படித்த நெருங்கிய தோழியின் பெயரை சரியாக கூறியதால் உண்மை என நம்பி அவருடன் நெருங்கி பழகியுள்ளார்.

தொடர்ந்து இருவருக்கும் இடையே வாட்ஸப் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது லண்டனில் வசிக்கும் அந்த தோழி தனது கணவர் இறந்து விட்டதாகவும், தற்போது தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு தஞ்சையைச் சேர்ந்த இந்த பெண்ணும் இரக்கப்பட்டு தோழியிடம் கருணை காட்டியதோடு மட்டுமல்லாமல் அதீத அன்பும் காட்டி வந்துள்ளார்.

Also Read: மந்திரவாதியுடன் கள்ளக்காதல்.. காதலனுடன் திட்டமிட்டு கணவனை கொலை செய்த மனைவி!

இந்த நிலையில் லண்டனில் இருந்து அந்த பெண்,  நான் உனக்கு பரிசு பொருட்கள் அனுப்பி வைத்துள்ளேன் என கூறியுள்ளார். இதன் பின்னர் சில நாட்கள் கழித்து லண்டன் விமான நிலையத்திலிருக்கும் ஏர்லைன் கார்கோ ஏஜென்சி என்ற பார்சல் அலுவலகத்தில் இருந்து தஞ்சையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு தொலைபேசியில் பேசியுள்ளனர்.

போலியான இந்த அழைப்பில் உங்களுக்கு லண்டனில் இருந்து இந்தியாவிற்கு பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள்கள் இருப்பதாகவும், இதற்கு வரியாக ரூ.1.50 லட்சம் கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இது குறித்து அவர் லண்டன் தோழியிடம் விசாரித்துள்ளார். அதற்கு அவர் வரியை தற்போது கட்டுமாறும் நான் இந்தியா வந்தவுடன் பணத்தை தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.

Also Read: டிஜிட்டல் கைது என கூறி மோசடி.. முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.23 கோடி கொள்ளையடித்த கும்பல்!

இதற்கு சம்மதித்த தஞ்சை பெண் வங்கி பணப்பரிவர்த்தனை மூலம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை பார்சல் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். மேலும் பார்சலில் உள்ளே சில லண்டன் பணம் இருப்பதாகவும் இதனை மாற்ற ரூ.2 லட்சம் கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். பின்னர் அபராத தொகை, பார்சல் உரிமையாளருக்கான தொகை, பார்சல் இன்சூரன்ஸ் தொகை என வெவ்வேறு விதங்களில் பல பரிவர்த்தனைகள் மூலம் பணம் கேட்டு ரூ.46.91 லட்சம் அந்தப் போலி பார்சல் அலுவலகத்தின் வங்கி கணக்கிற்கு தஞ்சையை சேர்ந்த பெண் அனுப்பியுள்ளார்.

ஆனால் லண்டனில் இருந்து எந்த வித பார்சலும் அவரது கைக்கு வரவில்லை. இது குறித்து தனது தோழி எனக் கூறிய பெண் மற்றும் பார்சல் அலுவலகத்தில் இருந்து வந்த எண்ணை தொடர்பு கொண்ட போது நீண்ட நாட்களாக இணைப்பு கிடைக்காமல் இருந்துள்ளது. அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.