Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

த.வெ.க மாநாடு.. மதுரை சென்றடைந்த தலைவர் விஜய்.. திடலில் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு..

TVK State Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (ஆகஸ்ட் 21, 2025)மதுரையில் நடைபெற இருக்கும் நிலையில் இன்று மாலை அக்கட்சி தலைவர் விஜய் மதுரை சென்றடைந்தார். மேலும், மாநாட்டு திடலுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.

த.வெ.க மாநாடு.. மதுரை சென்றடைந்த தலைவர் விஜய்.. திடலில் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Aug 2025 21:00 PM

மதுரை, ஆகஸ்ட் 20, 2025: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை, அதாவது ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மதுரைக்கு சென்றடைந்தார். மேலும் மாநாடு நடைபெறும் திடலில் ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார். தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஏழு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகள் அரசியல் கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியாக தேர்தலை சந்திக்க உள்ளன. இதற்காக இரு தரப்பிலும் தனித்தனியாக தேர்தல் வியூகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

10 லட்சம் பேர் கலந்துக்கொள்ளும் மாநாடு:

இத்தகைய சூழலில், தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. அதனை முன்னிட்டு, நாளை ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரை பாரபத்தியில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. தென் மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அமைய உள்ளது. இம்மாநாட்டிற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: த.வெ.க மாநாடு.. அடுத்தடுத்த சோகம்.. 100 அடி கொடி கம்பம் விழுந்து நொறுங்கிய கார்.. ..

மேலும், பெண்களுக்கென பிரத்தியேகமாக பிங்க் ரூம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்லும் வகையில் ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் அல்லது அங்கு வரக்கூடிய மக்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால், 500 மருத்துவர்கள் தயாராக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுரையில் நடக்கும் த.வெ.கவின் இரண்டாவது மாநில மாநாடு.. தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

அத்துடன், மாநாடு நடைபெறும் இடத்தில், தமிழக வெற்றி கழகத் தலைவர் மக்களைச் சந்திக்கும் வகையில் மேடையிலிருந்து 300 மீட்டர் தொலைவிற்கு ரேம்ப் வாக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டு முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தலைவர் விஜய் கொடியேற்ற உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மதுரைக்கு சென்றடைந்த தலைவர் விஜய்:

இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று, அதாவது ஆகஸ்ட் 20, 2025 அன்று, சாலை மார்க்கமாக சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். மதுரைக்கு சென்றடைந்த அவர், மாநாடு நடைபெறும் பாரபத்தி திடலைச் சென்று, ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு வசதிகள் குறித்து அங்கு இருந்த நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின், இன்று இரவு விரகனூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து, நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.