மார்ச்சில் அமலுக்கு வரும் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்!
Velachery - Parangimalai Train Service | சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ உள்ளிட்ட ரயில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வேளச்சேரி - பரங்கிமலை ரயில் திட்ட பணிகள் 2026 மார்ச் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை, பிப்ரவரி 03 : வேளச்சேரி – பரங்கிமலை ரயில் திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும், அது 2026 மார்ச் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெற்கு ரயில்வே (Southern Railway) அதிகாரிகள் கூறியுள்ளனர். 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் (2026 – 2027 Union Budget) ரயில் சேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்களை சந்தித்துள்ள அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். இந்த நிலையில், பட்ஜெட்டை தொடர்ந்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே அதிகாரிகள்
சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று (பிப்ரவரி 02, 2026) சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், தெற்கு ரயில்வே நிர்வாக தலைமை அதிகாரி சுனில் குமார் மவுரியா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கடந்த மத்திய பட்ஜெட்டில் ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ரூ.7,611 கோடியும், கேரளாவுக்கு ரூ.3,795 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்… நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய மதுரை கலெக்டர் – என்ன நடந்தது?
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் முடிவடைந்துள்ளன
தொடர்ந்து பேசிய அவர்கள் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளில் ரயில்வே துறை சார்ந்த பணிகள் முடிந்துள்ளன. ஆனால், ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கான அணுகுசாலை, நடைமேடை பாலம் உள்ளிட்ட மாநில அரசு சார்ந்த பணிகள் நடைபெற வேண்டிய நிலை உள்ளது. அந்த பணிகள் நிறைவடைந்த உடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : மாம்பழம் சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
மார்ச்சில் அமலுக்கு வரும் வேளச்சேரி – பரங்கிமலை ரயில் திட்டம்
வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த மாதம் ரயில் வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனை தொடர்ந்து 2026, மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது என அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.