சென்னை ஐபிஎல் மேட்ச் பார்த்தபோது நேர்ந்த கோர விபத்து: பால்கனி இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி!
Chennai Ramapuram Accident: சென்னை ராமாபுரத்தில் உள்ள எல்&டி நிறுவன ஊழியர்களின் தற்காலிக குடியிருப்பில், நள்ளிரவில் அதிகப்படியான தொழிலாளர்கள் பால்கனியில் திரண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்த்தபோது பாரம் தாங்காமல் இரும்பு பால்கனி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 52 வயது தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை ராமாபுரம் சக்தி நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள பிரபல எல்&டி கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் குடியிருப்பில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து நேரிட்டது. இங்குள்ள மூன்று அடுக்கு இரும்பு கட்டமைப்பிலான தற்காலிக குடியிருப்பில் (லேபர் செட்) இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியபோது, அதன் நேரலையைக் காண்பதற்காக முதல் தளத்தின் பால்கனி பகுதியில் அளவுக்கு அதிகமான தொழிலாளர்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பாரம் தாங்காமல் இடிந்த பால்கனி
அப்போது எதிர்பாராத விதமாக, தொழிலாளர்களின் ஒட்டுமொத்த எடையையும் தாங்க முடியாமல் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த அந்த பால்கனி திடீரென சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் பால்கனியில் நின்றுகொண்டிருந்த 35 வெளிமாநில ஊழியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்கள் உடனடியாக நந்தம்பாக்கம் காவல் நிலையத்திற்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றிற்கு அனுப்பி வைத்தனர்.
ஜார்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு மற்றும் தற்போதைய நிலை
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரிஜ்சு மான்சி (52) என்ற தொழிலாளி, தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 23 பேர் குணமடைந்து இருப்பிடம் திரும்பியுள்ளனர். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12 பேரில், கொல்கத்தாவைச் சேர்ந்த சுகனிஆர்க் (24) என்ற இளைஞருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: சென்னை: தலைமைச் செயலகத்தில் புதிய கட்டுப்பாடுகள்: இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்!
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்
இதற்கிடையே, விபத்துக்குள்ளானவர்கள் சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் என்ற தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ராமாபுரத்தில் நடந்த இந்த விபத்திற்கும் தங்களது திட்டப் பணிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பானது, ‘எல்&டி பி&எஃப் இன்னோவேஷன் கேம்பஸ்’ (L&T P&F Innovation Campus) என்ற தனியார் கட்டுமானத் தளத்திற்கு உட்பட்டது என்றும், பொதுமக்கள் யாரும் தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.