சென்னை: தலைமைச் செயலகத்தில் புதிய கட்டுப்பாடுகள்: இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்!
Secretariat Biometric Attendance: சென்னை தலைமைச் செயலகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வரும் சூழலில், இன்று முதல் மனிதவள மேலாண்மைத் துறையில் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார வருகைப்பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை பணிபுரியும் ஊழியர்களின் வருகையைத் துல்லியமாகக் கண்காணிக்க இந்த அதிநவீன தொடுதிரை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள தமிழக அரசு தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கியத் துறை செயலாளர்களின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 தளக் கட்டிடத்தில் மொத்தம் 54 அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள உயர் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். இந்த முதன்மை அலுவலகங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கான பணி நேரமாக காலை 10:00 மணி முதல் மாலை 05:45 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மதிய உணவுக்காக அரை மணி நேரம் இடைவேளையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசுப் பணியாளர்களின் வருகையை முறைப்படுத்தும் நோக்கில் புதிய தொழில்நுட்ப நடைமுறை இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
மனிதவள மேலாண்மைத் துறையில் தொடக்கம்
தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத் துறையில், ஊழியர்களின் வருகையைப் பதிவு செய்வதற்காக பயோமெட்ரிக் (Biometric) மற்றும் முகம் கண்டறியும் (Face ID) அதிநவீன தொடுதிரை இயந்திரங்கள் தற்பொழுது நிறுவப்பட்டுள்ளன. இந்தத் துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு, இன்று முதல் பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார அடிப்படையிலான வருகைப்பதிவு முறையானது முற்றிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் வருகையைத் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பின் மூலமாகவே, அத்துறையின் அனைத்து அலுவலர்களின் தினசரி வருகையும் இன்று முதல் தீவிரமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
Also Read: விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்.. வாகன ஓட்டிகளே உஷார்.. பாதுகாப்பு குழு நடவடிக்கை!
அனைத்துத் துறைகளுக்கும் விரிவாக்கம்: தமிழக அரசின் நடவடிக்கை
மனிதவள மேலாண்மைத் துறையில் தற்பொழுது சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை, மிக விரைவில் தலைமைச் செயலகத்தின் கீழ் இயங்கும் மற்ற அனைத்து அரசுத் துறைகளுக்கும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த தலைமைச் செயலகப் பணியாளர்களின் பணி நேரமும், வருகையும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. முன்னதாக, கடந்த ஆட்சியின் போது இதே போன்ற பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையைக் கொண்டு வர அரசு முயன்ற போது, அதற்குத் தலைமைச் செயலகப் பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததால் அந்த உத்தரவு பாதியிலேயே திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த கால எதிர்ப்புகளையும் கடந்து, தற்போது முதற்கட்டமாக மனிதவள மேலாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான இந்த டிஜிட்டல் வருகைப்பதிவு நடைமுறை தற்பொழுது முழுமையாக அமலுக்கு வந்துள்ளது கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.