Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தசரா திருவிழா.. குலசேகரப்பட்டினத்தில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு.. காவல்துறை முக்கிய அறிவிப்பு

Kulasekarapattinam Dasara Festival : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் 2025 அக்டோபர் 2ஆம் தேதி கடற்கரையில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி காவல்துறை குலசேகரப்பட்டினத்தில் போக்குவரத்து மாற்றத்தை செய்துள்ளதோடு, கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தசரா திருவிழா.. குலசேகரப்பட்டினத்தில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு.. காவல்துறை முக்கிய அறிவிப்பு
தசரா திருவிழா
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Oct 2025 07:42 AM IST

தூத்துக்குடி, அக்டோபர் 01 : குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி காவல்துறை வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2025 அக்டோபர் 2ஆம் தேதி சூரசம்கார நிகழ்வு மற்றும் அக்டோபர் 3ஆம் தேதி காப்பு திரித்தல் நிகழ்வு நடைபெறுவதையொட்டி, காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக, தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். 2025ஆம் ஆண்டுக்கான தசரா திருவிழா குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 2025 செப்டம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அம்மனை தரிசித்து வருகின்றனர். மேலும், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் விதவிதமான வேடம் அணிந்து, வீடு வீடாக சென்று காணிக்கைகளை பெற்று வருகின்றனர்.

தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 2025 அக்டோபர் 2ஆம் தேதி (நாளை) குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நடைபெறும். இதனால் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருப்பார்கள்.  இதன்பிறகு, 2025 அக்டோபர் 3ஆம் தேதி காப்பு திரித்தால் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதனால், குலசேகரப்பட்டினம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தசரா திருவிழாவையொட்டி, குலசேகரப்பட்டினத்தில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Also Read : சென்னை ஏர்போர்ட்டில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் சிக்கிய நடிகர்!

குலசேகரப்பட்டினத்தில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு

2025 அக்டோபர் 2ஆம் தேதி சூரசம்கார நிகழ்வு மற்றும் காப்பு திரித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிக்கு செல்வதற்கும், பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கும் கனரக வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read : தமிழ்நாட்டில் அக்டோபர் 3ம் தேதி விடுமுறையா? – உண்மை இதுதான்!

திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் ECR ரோடு வழியாக மணப்பாடு, பெரியதாழை, உவரி மார்க்கமாக கன்னியாகுமரி செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் குலசேகரன்பட்டினத்தை தவிர்த்து அதற்கு பதிலாக திருச்செந்தூர், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், மணிநகர், படுக்கப்பத்து மார்க்கமாக பெரியதாழை வழியாக கன்னியாகுமரி செல்ல வேண்டும். இல்லையெனில், சாத்தான்குளம், திசையன்விளை மார்க்கமாக கன்னியாகுமரி செல்லவும்.

கன்னியாகுமரி, பெரியதாழை, மணப்பாடு ECR ரோடு வழியாக குலசேகரன்பட்டினம் மார்க்கமாக திருச்செந்தூர் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் குலசேகரன்பட்டினத்தை தவிரத்து அதற்கு பதிலாக பெரியதாழை ECR ரோடு வழியாக படுக்கப்பத்து, மணிநகர், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் செல்லவும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.