குலசேகரப்பட்டினம் தசரா.. பக்தர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிப்பு!
Kulasekarapattinam Dasara 2025: குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தூத்துக்குடி காவல்துறை அறிவித்துள்ளது. சாதி, மத அடையாள ஆடைகள், நிஜ ஆயுதங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.சிசிடிவி கண்காணிப்பு, விரிவான மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகள், வாகன நிறுத்தம் என அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

திருச்செந்தூர், செப்டம்பர் 30: உலகப் புகழ் பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில், அதன் இறுதி நாள் தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடகா மாநிலம் மைசூரு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைந்திருக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாக்கள் உலகப் புகழ் பெற்றவை. இப்படியான நிலையில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தசரா விழாவுக்கான கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மாலை அணிந்து விதவிதமான வேடங்கள் தரித்து வீடு, வீடாக சென்று காணிக்கைகள் பெற்று வருகின்றனர். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் அக்டோபர் 2ம் தேதி நள்ளிரவு கோயிலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் நடைபெறும்.
இதனை முன்னிட்டு பக்தர்கள் குலசேகரப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மைசூர் தசரா திருவிழா.. ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?
செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்காக காவல்துறை தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 3000 முதல் 3 ஆயிரத்து 500 வரையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ வசதி, தீயணைப்பு மற்றும் மீட்பு வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில், வெளியூரில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வதற்காக 50 பேருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 ஏக்கர் பரப்பளவில் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவம், வாகன பார்க்கிங் போன தேவைப்படும் வசதிகள் எங்கு இருக்கிறது என்பதை அறிய வாட்ஸ்அப் மூலம் அறியும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் ஆம்புலன்ஸ் செல்ல தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Dindigul: திண்டுக்கலை ஆளும் சௌந்தரராஜ பெருமாள் – இந்த கோயில் சிறப்புகள் தெரியுமா?
பின்பற்ற வேண்டிய விதிகள்
குலசேகரபட்டினம் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சாதி அடையாளங்கள், மத அடையாளங்கள் கொண்ட உடைகள், அணிகலன்கள், ரிப்பன், கொடி என எதையும் பயன்படுத்தக்கூடாது. வேடம் இடும் பக்தர்கள் நிஜ ஆயுதங்கள் பயன்படுத்தக் கூடாது. திறந்த வெளி வாகனத்தில் பக்தர்களை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வந்தால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையினர் போல் சீருடை அணிந்து வர அனுமதி கிடையாது. கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். வியாபாரிகள் அனுமதியின்றி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது. இதே போல் மற்றவர்களை புண்படுத்தும் வகையில் வார்த்தைகளை உபயோகம் செய்யக்கூடாது.
கடந்த ஆண்டைப் போல இந்தாண்டும் பக்தர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விழாவை சிறப்பாக நடத்த உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.