கார்த்திகை தீபத் திருவிழா… தயாராகும் திருவண்ணாமலை… என்னென்ன ஏற்பாடுகள்?
tiruvannamalai karthigai deepam திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நாளை நடைபெற உள்ள நிலையில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 15ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உண்ணாமுலை அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் கடந்த மாதம் 24- ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கோவிலில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாளை (டிச.3) கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்த விழாவில், தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபடுவர்.
தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்
இதற்காக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 5 டி.ஐ.ஜி.க்கள், 43 எஸ்.பி-க்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் போலீசார் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலம் வரும் பக்தர்களுக்காக கிரிவலம் பாதையில் ரூ. 2.60 கோடியில் 15 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த குடிநீரை வழங்குவதற்கு சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், கோயிலின் உள்ளே இலவச தரிசன வரிசை மற்றும் சிறப்பு தரிசன வரிசை உள்ளிட்ட 114 இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




மேலும் படிக்க: கார்த்திகை தீபம்: பரணி தீப வழிபாடு எப்படி, எப்போது செய்ய வேண்டும்? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்!!
1,060 கண்காணிப்பு கேமராக்கள்- கோபுரங்கள் அமைப்பு
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக கிரிவலப் பாதை, மாடவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 1,060 கண்காணிப்பு கேமராக்களும், 24 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரத்தை இணைக்கும் 9 சாலைகளில் தற்காலிகமாக 24 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர்த்து, சுமார் 13 இடங்களில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் தற்காலிக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: கார்த்திகை தீபம்: எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? தேச மங்கையர்க்கரசி விளக்கம்!
24 மணி நேரம் செயல்படும் மருத்துவ முகாம்
மேலும், அருணாச்சலேஸ்வரர் கோவிலை சுற்றியும், மாட வீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட 26 இடங்களில் எல் இ டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர மருத்துவ சிகிச்சை முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை சார்பில் 61 இடங்களில் உதவி மையங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் 252 இடங்களில் அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் அடிப்படை தேவைக்காக 129 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.