திருப்பூரில் திமுக மகளிரணி மாநாடு.. திரளும் 2 லட்சம் பெண்கள்.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்
Tiruppur dmk womens conference: மாநாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலிருந்து சுமார் இரண்டு இலட்சம் பெண்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் பெண்கள் நலன் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பூர், டிசம்பர் 29: திருப்பூரில் இன்று ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான திமுக, ஆட்சியைத் தக்கவைக்க பல்வேறு அரசியல் யுக்திகளுடன் பணியாற்றி வருகிறது. எதிர்கட்சியான அதிமுக ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தமிழகம் முழுவதும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. தொடர்ந்து, இந்த தேர்தலில் புதிதாக போட்டியிட உள்ள விஜய்யின் தவெக தரப்பிலும் தமிழகம் முழுவதும் தீவிர வாக்குச்சேகரிப்பு நடந்து வருகிறது.
இதையும் படிக்க : விஜயகாந்த் நினைவு தினம்.. தலைவர்கள் மரியாதை.. பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் அமைதி பேரணி!
பரபரக்கும் தமிழக அரசியல் களம்:
இதன்மூலம், தலைவர்களின் அடுத்தடுத்த சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்களால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. மற்றொரு பக்கம், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்வதும், வேட்பாளர்களை தேர்வு செய்வதும் என்ற முனைப்பிலும் உள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்களுடன் தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து, திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் நீடிக்குமா அல்லது கூட்டணியில் இருந்து விளகுமா போன்ற எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது.




அந்தவகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடி கள நிலவரத்தை ஆய்வு செய்து வருகிறார். அதேபோல் மண்டல வாரியாக இளையரணி மாநாடுகள், பூத் கமிட்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறார்.
’வெல்லும் தமிழ்ப்பெண்கள்’:
இந்தநிலையில், திருப்பூரில் ’வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற தலைப்பில் இன்று மாலை 4 மணிக்கு திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டுக்கு துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு உரையாற்ற உள்ளார். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைப் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
2 லட்சம் பெண்கள் பங்கேற்க ஏற்பாடு:
மாநாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலிருந்து சுமார் 2 லட்சம் பெண்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெண்கள் நலன் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க : மது அருந்தியதை தட்டிக் கேட்ட மனைவி…ஆத்திரமடைந்த கணவன்…விபரீதத்தில் முடிந்த தகராறு!
தீவிர பாதுகாப்பு நடவடிக்கை:
இதையொட்டி, மாநாடு நடக்கும் இடத்தில் பெண்களின் வசதிக்காக மொபைல் கழிப்பறைகள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, தன்னார்வலர்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாடு முடிந்து செல்லும் பெண்களுக்கு இரவு உணவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, மாநாட்டை ஒட்டி பல்லடம் மற்றும் காரணம்பேட்டை பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக, போக்குவரத்து எந்தெரிசலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.