அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்துவதே இலக்கு…பெ. சண்முகம்!
The Goal Is To Defeat AIADMK BJP Alliance: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியை வீழ்த்துவதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் இலக்கு என்று அந்தக் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்துவது இலக்கு
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்தப் பட்டியலில் இடம் பெறாமல் போன வாக்காளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முகாம்களை பயன்படுத்தி தங்களது பெயர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். விவசாயத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் குருவை சாகுபடிக்கு இழப்பீடு அறிவித்ததை போல, சம்பா சாகுபடிக்கும் இழப்பீடு அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே, ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் அறிவித்தது போதுமானதல்ல. தற்போது உள்ள உற்பத்தி செலவுக்கு ஏற்ப இழப்பீட்டு தொகையையும் உயர்த்த வேண்டும். இந்த தொகையை உரிய காலத்தில் வழங்குவதற்கான நடைமுறையை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
தொழிலாளர் சட்டத்தை அமல் படுத்த எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
தற்போது, அமல்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் நலன் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கக் கூடிய 4 தொழிலாளர்கள் தொகுப்பு சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்தச் சட்டத்தை கேரள மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதேபோல, தமிழகத்திலும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
மேலும் படிக்க: SIR படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை.. 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.. இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்!!
அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடிப்பதே இலக்கு
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை தோற்கடிப்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் நோக்கமாகும். இந்த நோக்கத்துக்கு ஏற்ப எங்கள் கட்சியின் அணுகு முறை இருக்கும். செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்று நடைமுறைப்படுத்தவதாக கூறியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே அனைத்து அரசியல் கட்சிகளின் விருப்பமாக இருக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதே தான் விருப்பமாகும்.
திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம்
இதற்காக உரிய நேரத்தில் பேச்சுவார்த்தைக் குழுவுடன் ஆலோசித்து கூடுதல் தொகுதிகள் வழங்கக் கோரி திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. அதற்கேற்றவாறு கூடுதல் தொகுதிகள் கோரி அனைத்தும் முயற்சிகளையும் மேற்கொள்வோம். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும். இதில், கண்காணிப்பையும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு