காவல் நிலையத்தில் தந்தை-மகள் விஷம் குடித்த சம்பவம்..தென்காசியில் 3 காவலர்கள் சஸ்பெண்ட்…எஸ்.பி.மாதவன் அதிரடி உத்தரவு!
Tenkasi 3 Policemen Suspend: தென்காசி மாவட்டத்தில் காவல் நிலையத்தில் தந்தை மகள் விஷம் குடித்த சம்பவத்தில் 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. எஸ். மாதவன் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், ஒரு உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் முஹமது கனி. இவரது மகள் ஆயிஷா சித்திக்கா. இவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக புளியங்குடி போலீசார் அவர்களை கடந்த 2 நாள்களுக்கு முன்பு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, விசாரணையின் நடுவே முஹமது கனி சில ஆவணங்களை வீட்டுக்கு சென்று எடுத்து வருவதாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். அங்கு, திடீரென விஷத்தை குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த விஷத்துடன் காவல் நிலையத்துக்கு முஹமது கனி வந்துள்ளார். அப்போது, காவல் நிலையத்தில் போலீசாரின் விசாரணையில் இருந்த தனது மகள் ஆயிஷா சித்திக்கை தனியாக அழைத்து அவரிடமும் இந்த விஷத்தை கொடுத்து குடிக்குமாறு கூறியுள்ளாராம். அதன்படி, அவரது மகளும் காவல் நிலையத்தில் வைத்து விஷத்தை அருந்தியதாக கூறப்படுகிறது.
தென்காசி எஸ். பி. விசாரணை
இதை தொடர்ந்து, சிறிது நேரத்தில் இருவரும் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு புளியங்குடி பகுதி, சிந்தாமணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, இருவரும் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. எஸ். மாதவன் கவனத்துக்கு சென்றது. அதன்பேரில், உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு எஸ்.பி. உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: பைக்கில் பெற்றோருடன் சென்ற கைக் குழந்தைக்கு நேர்ந்த கதி…ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
புளியங்குடி காவல் நிலையத்தில் 3 காவலர் சஸ்பெண்ட்
இதில், புளியங்குடி காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகள் விஷம் குடித்த விவகாரத்தில் குறிப்பிட்ட போலீசார் அஜாக்கிரதையாக செயல்பட்டது தெரிய வந்தது. அதன்படி, புளியங்குடி காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த தனிப் பிரிவு காவலர் மருது பாண்டியன் மற்றும் பெண் காவலர் தேவி, போலீஸ் ஏட்டு சிவா ஆகிய 3 பேரும் பணி நேரத்தில் ஆஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. எஸ். மாதவன் அதிரடியாக உத்தரவிட்டார்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உதவி ஆய்வாளர்
மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் புளியங்குடி உதவி ஆய்வாளர் தீபன் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது தென்காசி மாவட்ட காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை..கிலோ கணக்கில் கடல் அட்டைகள்-குதிரைகள் பறிமுதல்..ராமநாதபுரத்தில் பரபரப்பு!



