கீரிப்பிள்ளை கடித்து பலியான 7 வயது சிறுவன்.. அதிர்ச்சி சம்பவம்!
Boy Died By Mongoose Bite | திருவாரூரில் மூன்று மாதங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவரை கீரிப்பிள்ளை கடித்துள்ளது. அந்த சிறுவன் அதற்கான தொடர் சிகிச்சை எதையும் பெறாத நிலையில், கீரிப்பிள்ளை போல செயல்களை செய்ய தொடங்கிய நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருவாரூர், ஜனவரி 27 : திருவாரூரில் (Thiruvarur) கீரிப்பிள்ளை கடித்து முறையாக சிகிச்சை பெறாமல் இருந்து வந்த சிறுவன், உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு சிறுவனை கீரிப்பிள்ளை கடித்த நிலையில், அதனை கவனிக்காமல் விட்டுவிட்டதால் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கீரிப்பிள்ளை கடித்ததால் சிறுவனுக்கு நேர்த்த துயரம்
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் புது தெருவை சேர்ந்தவர்கள் முத்து – தேவி தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுவனின் வீட்டில் அவரது பெற்றோர் கோழிகளை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக இரவு நேரத்தில் கோழியை பிடிக்க வந்த கீரிப்பிள்ளை ஒன்று தூங்கிக்கொண்டு இருந்த சிறுவனை கடித்துள்ளது. இதனால் வலி தாங்காமல் சிறுவன் அலறி துடித்துள்ளார்.
இதையும் படிங்க : பெரம்பலூரில் ரெளடி மீது என்கவுண்டர் ஏன்? மத்திய மண்டல ஐ.ஜி. பரபரப்பு விளக்கம்!
முறையான சிகிச்சை பெறாததல் சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்
பிள்ளையின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனுக்கு ஊசி போடப்பட்டுள்ளது. ஆனால், அதனை தொடர்ந்து சிறுவன் எந்த விதமான சிகிச்சையும் பெறாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு சிறுவனுக்கு அதிக காய்ச்சல் அடித்துள்ளது. எனவே பெற்றோர் அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு.. ரவுடி அழகுராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காலையிலேயே பரபரப்பு
கீரிப்பிள்ளையை போல செயல்பட தொடங்கிய சிறுவன்
அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், ஜனவரி 26, 2026 அன்று சிறுவனுக்கு காய்ச்சல் அதிகமாகியுள்ளது. அதுமட்டுமன்றி, அவர் கீரிப்பிள்ளையை போல சில செயல்களை செய்துள்ளார். இந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த நிலையில், சிறுவனின் உடலை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்காமல் சுகாதாரத் துறை அதிகாரிகளின் கண் முன்பு சிறுவன் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.