டாஸ்மாக்கில் பாட்டில் திரும்ப பெறும் திட்டம்.. சிக்கலில் தமிழக அரசு!
Tamilnadu Government: தமிழக அரசின் டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் ஊழியர்களுக்கு சுமையாக மாறியுள்ள நிலையில், சேமிப்பு சிக்கல் எழுந்துள்ளது. நவம்பர் 2025 காலக்கெடுவுக்குள் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த, டாஸ்மாக் நிர்வாகம் சுமார் 1,500 கடைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது.

டாஸ்மாக்
தமிழ்நாடு, செப்டம்பர் 27: தமிழக அரசின் கீழ் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை முழு வீச்சில் அமல்படுத்த நிர்வாகம் முயற்சி செய்து வரும் நிலையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதனை சமாளிக்க மாற்று திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம். தமிழ்நாடு முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. நகரம் தொடங்கி கிராமம் வரை குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் பொதுமக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இவை இயங்கி வருகிறது. இதன்மூலம் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் வருகிறது.
இப்படியான நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படுகின்றன. மது பிரியர்களில் சிலர் மது அருந்தி விட்டு போதையில் பாட்டில்களை உடைப்பதாலும், ஆங்காங்கே போட்டு விட்டு செல்வதாலும் வன விலங்குகள், பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கூடுதல் ரூ.10 வசூலிக்கப்படுவது ஏன்? அமைச்சர் முத்துசாமி விளக்கம்!
காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்
இந்த நிலையில் தான் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மது பாட்டில்களுக்கு அடக்கவிலையை விட கூடுதலாக ரூ.10 அதிகமாக பெறப்படுவது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டு, அதனை திரும்ப கொடுத்தவுடன் பணம் மீண்டும் வழங்கப்படுகிறது. இது ஒரு டெபாசிட் திட்டம் என விளக்கம் கொடுத்தார். ஆனால் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளதால் அவர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மீண்டும் எழுந்த புதிய சிக்கல்
இதனிடையே கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை நீட்டிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்துக்கான இறுதி காலக்கெடுவான நவம்பர் 30, 2025 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பாட்டில் திரும்ப வாங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் டாஸ்மாக் நிர்வாகம் போராடி வருகிறது. இப்படியான நிலையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் போது காலி பாட்டில்களுக்கான சேமிப்பு சிக்கல்களைச் சமாளிக்க சுமார் 1,500 கடைகளை வாடகைக்கு எடுக்க பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு: டாஸ்மாக் கடையால் பிரச்னையா? ஒரு புகார் போதும்.. 30 நாட்களில் நடவடிக்கை
பெரும்பாலான கடைகளில் போதுமான இடம் இல்லாததால், அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் சுமார் 1,800 கடைகளில் இந்த திரும்பப் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தாமதமாகும் கடைகளின் மேலாளர்கள் மூலம் அறிக்கைகள் பெறப்பட்டு அனைத்து இடங்களிலும் இந்த திட்டம் கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் 17 மாவட்டங்களில் இந்த திட்டத்தை முழுமையாகவும், ஏழு மாவட்டங்களில் பகுதியளவு செயல்படுத்தியுள்ளதாகவும் டாஸ்மாக் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.