கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. தவாக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை.. அதிர்ச்சி பின்னணி
Krishnagiri Crime News : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமாக, அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தவாக நிர்வாகி கொலை
கிருஷ்ணகிரி, செப்டம்பர் 17 : கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழிற்போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சொங்கோடசிங்கனள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (37). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக செயல்பட்டு வந்தார். இவர் பன்றிகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழிலையும் செய்து வந்தார். இந்த நிலையில், 2025 செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று காலையில் அஞ்சாலம் கிராமத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
அப்போது, அவர்களை கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால், அவரை தாக்க முயன்றனர். இதனால், பதறிய ரவி, அங்கிருந்து தப்பயோட முயன்றார். இருப்பினும், ரவிசங்கரை இரண்டு பேரை ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர். இதனை அடுத்து, அவர் நடுரோட்டிலையே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர், அந்த இரண்டு பேர் தப்பியோடினர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
Also Read : பட்டப்பகலில் பயங்கரம்… பாமக பிரமுகரை அடித்தே கொன்ற மர்ம கும்பல்.. செங்கல்பட்டில் சம்பவம்
தவாக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் ரவி சங்கரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரவி சங்கர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனை அடுத்து, ரவி சங்கர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ரவி சங்கரை கொலை செய்த பருவிதி பகுதியைச் சேர்ந்தவர் ஆதி, உல்லட்டி கிராமத்தைச் சேர்ந்த ரக்ஷித் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், தொழிற்போட்டி காரணமாக, ரவி சங்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.
Also Read : காதலியை மிரட்ட தற்கொலை செய்வதுபோல நடித்த இளைஞர் உயிரிழப்பு!
சமீபத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி அடித்து கொலை செய்யப்பட்டார். பாமக பிரமுகரான வாசு மீது கல்லை போட்டு, கிரிக்கெட் பேட்டால் தாக்கியும் மர்ம கும்பல் அவரை கொலை செய்துள்ளது. இதற்கு பாமகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.