கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. “விசில் புரட்சி வெடிக்கப்போகுது”.. செங்கோட்டையன் அதிரடி
Tamilnadu Assembly Election: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான முடிவுகளைத் தருகின்றன என்று குறிப்பிட்ட அவர், இந்தக் கணிப்புகள் பெரும்பாலும் எதார்த்த நிலைக்கு மாறாக இருப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக, சில ஊடகங்கள் தவெக-விற்கு குறைந்த இடங்களையே கணித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் தீர்ப்பு வேறு, கருத்துக்கணிப்பு வேறு என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எடுத்து இருந்தன. மேற்குவங்காளத்தில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து நிறுவனங்களும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.
இதையும் படிக்க: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. மாநிலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மே 4!
பேரிடியாக அமைந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்:
இதில், பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக கணிசமான இடங்களை பெறும் என்றும், தவெகவுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், அதிமுக முன்னிலை பெறுவதாக சில கருத்து கணிப்புகளும், தவெக ஆட்சி அமையும் என்று ஒரு கருத்து கணிப்பும் கூறுகிறது. அதன்படி, தவெகவினருக்கும், அதிமுகவினருக்கும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் பேரிடியாக அமைந்துள்ளது.
கருத்துக்கணிப்புகளை நிராகரித்த செங்கோட்டையன்:
இந்நிலையில், இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான முடிவுகளைத் தருகின்றன என்று குறிப்பிட்ட அவர், இந்தக் கணிப்புகள் பெரும்பாலும் எதார்த்த நிலைக்கு மாறாக இருப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக, சில ஊடகங்கள் தவெக-விற்கு குறைந்த இடங்களையே கணித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆன்லைன் சர்வே மற்றும் 120 இடங்கள்:
“தந்தி” நிறுவனம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆன்லைன் சர்வே முடிவுகளைச் சுட்டிக்காட்டிய அவர், அதில் தவெக 120-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறும் என்று வந்துள்ளதைக் குறிப்பிட்டார். மேலும், உலக வரலாற்றில் இதற்கு முன் பல நாடுகளில் இது போன்ற கருத்துக்கணிப்புகள் பொய்யாகி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இதையும் படிக்க: வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்.. மே 2ல் தமிழகம் வரும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள்!!
“விசில் புரட்சி” வெடிக்கப்போகுது:
விஜய்யின் வருகையை ஒரு பெரும் புரட்சியாக வர்ணித்த செங்கோட்டையன், இதுவரை பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி எனப் பல புரட்சிகளை இந்திய வரலாறு கண்டுள்ளது. இப்போது தமிழகத்தில் தவெக தலைவர் தளபதி விஜய்யின் “விசில் புரட்சி” வெடிக்கப் போகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவில் எதிரொலிக்கும். தவெக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும், தளபதி விஜய் தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறார் என்பது மக்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று.
கருத்துக்கணிப்புகள் யாரால், எந்த நோக்கத்திற்காக எடுக்கப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்பிய அவர், உண்மையான முடிவுகள் வரும்போது விஜய்யின் வெற்றி உலகையே ஆச்சரியப்படுத்தும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.