ஜனவரி முதல் வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டசபை.. பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்!!
TamilNadu Assembly: இடைக்கால பட்ஜெட் தேர்தலுக்குச் சற்று முன்னதாக தாக்கல் செய்யப்படுவதால், இதில் புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மற்றும் நலத்திட்டங்கள் வெளியாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து, அடுத்த நாளே வேளாண் பட்ஜெட்டும் இடைக்காலமாகத் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

முதல்வர் ஸ்டாலின்
சென்னை, டிசம்பர் 17: தமிழக சட்டசபை 2026 புத்தாண்டு முதல் வாரத்தில் கூட இருக்கிறது. சரியாக, ஜனவரி 5ம் தேதியன்று சட்டசபை அமர்வு தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மாநில ஆளுநர் சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைத்து உரை நிகழ்த்துவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டுக்கான கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையை கூட்டுவதற்கு அனுமதி அளித்ததும் அதுதொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2025-ன் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் வந்த சில நிமிடங்களிலேயே புறப்பட்டுச் சென்றார்.
மேலும் படிக்க: 2026 சட்டமன்ற தேர்தல்…தவெக-பாஜகவுக்கு…வைகோ மறைமுக எச்சரிக்கை!
ஆளுநர் உரையை வாசிப்பாரா?
கடந்த கூட்டத்தொடர்களிலும் ஆளுநர் உரையின் போது, சர்ச்சை ஏற்பட்டு அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சில நிமிடங்களிலேயே தனது உரையை நிறைவு செய்தார். இதன் காரணமாக நிகழாண்டும் தமிழக அரசு தயாரித்து அளித்துள்ள உரையை ஆளுநர் முழுமையாகப் படிப்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்:
தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், மற்றும் பிற விவாதங்கள் சுமார் மூன்று நாட்கள் வரை நடைபெறும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், வழக்கமான முழு நிதிநிலை அறிக்கைக்குப் பதிலாக, அதற்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் (Interim Budget) மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக சட்டசபையில் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, புதிய நிதிநிலை அறிக்கையை ஜூன் மாதம் முழுமையாக தாக்கல் செய்யும்.
ஒரேநாளில் வேளாண் பட்ஜெட்:
இந்த இடைக்கால பட்ஜெட் தேர்தலுக்குச் சற்று முன்னதாக தாக்கல் செய்யப்படுவதால், இதில் புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மற்றும் நலத்திட்டங்கள் வெளியாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து, அடுத்த நாளே வேளாண் பட்ஜெட்டும் இடைக்காலமாகத் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அதேசமயம், இடைக்கால வேளாண் பட்ஜெட்டும் பொது பட்ஜெட்டுடன் சேர்த்தே தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழக காவல் துறையில் நீடிக்கும் ஆர்டர்லி முறை.. உடனடியாக திரும்பப்பெற தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவு..
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதன் மீதான பொது விவாதம் சுமார் நான்கு நாட்கள் வரை நடைபெறலாம். பிப்ரவரி மாதத்தின் இறுதியில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், அதற்கு முன்னதாகவே இடைக்கால பட்ஜெட் தாக்கல் உட்பட அனைத்து சட்டமன்ற நிகழ்வுகளும் நிறைவு செய்யப்பட்டுவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.