TVK Vijay: இதுதான் தேதி.. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களை சந்திக்கும் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களை மூன்று கட்டங்களாக சந்திக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 30 முதல் ஜூன் இரண்டாம் வாரம் வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

சென்னை, மே 26: பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவ மாணவியர்களை தமிழக வெற்றிக்கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் (Thalapathy Vijay) சந்திக்கும் நிகழ்ச்சி தொடர்பான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2025, மே 8ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025, மே 16 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது. நடப்பாண்டு சொன்னதற்கு ஒருநாள் முன்னால் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை பார்த்து மகிழ்ந்தனர். இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி அறிவிப்பு
இது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தமிழக மக்களிடையேயும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. 2023 ஆம் ஆண்டு ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி 2024 ஆம் ஆண்டு இரு கட்டங்களாக நடைபெற்றது. வட மாவட்டங்கள் ஒரு நாளிலும், தென்மாவட்டங்கள் மற்றொரு நாளிலும் அழைக்கப்பட்டு மாணவ, மாணவியர்களை விஜய் சந்தித்தார். இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான சந்திப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த முறை மூன்று கட்டங்களாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று கட்டங்களாக சந்திக்கும் விஜய்
மே 30ஆம் தேதி முதல் கட்டமாக பரிசளிப்பு விழாவும், அதற்கு அடுத்த வாரம் இரண்டாம் கட்டமும், மூன்றாம் கட்ட பரிசளிப்பு விழா ஜூன் இரண்டாம் வாரமும் நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது. மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் பெற்றோர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவிற்கு தங்களது பெற்றோருடன் வரும் அனைத்து மாணவ, மாணவியர்களும் தகுந்த அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்புடன் வந்து செல்வதற்கு சம்பந்தப்பட்ட தொகுதியின் நிர்வாகிகள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களது கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் விஜய் இந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் இதற்கு எதிர்மறையான கருத்துக்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் 16 வகையான உணவுகளும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தகுதியுள்ள மாணவ, மாணவியர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகளும் விறுவிறுப்பாக தமிழக வெற்றிக் கழக தொண்டர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.