TVK Vijay: எகிறும் எதிர்பார்ப்பு.. நாகை, திருவாரூரில் விஜய் இன்று பிரச்சாரம்!
Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திருச்சியில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குப் பிறகு, தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிரச்சாரம், 2026 தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்
நாகப்பட்டினம், செப்டம்பர் 20: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய இரு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளிக்க காத்திருக்கின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாத காலமே உள்ளது. இதனால் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், வெற்றி பெறும் கூட்டணியில் இடம் பெற வேண்டும் எனவும் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி என அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இப்படியான நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு புதிய வரவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியும் களமிறங்குவது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் தேர்தல் பரப்புரை
இப்படியான நிலையில் விஜய் 2025 செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 2025 டிசம்பர் 20ஆம் தேதி வரையிலான ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் மாவட்டந்தோறும் தேர்தல் பரப்பரை மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மரக்கடை பகுதியில் தனது தேர்தல் பரப்புரையை விஜய் தொடங்கினார். திருச்சி விமான நிலையத்திற்கு காலை 9:40 மணியளவில் வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து காலை 10:30 மணிக்கு அவர் மரக்கடை பகுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அப்பகுதிக்கு வந்து சேரவே மதியம் மூன்று மணி ஆகிவிட்டது.
Also Read: ‘கீழே இறங்குப்பா’.. திடீரென டென்ஷனான விஜய்
இதனைத் தொடர்ந்து அன்றைய நாளில் திட்டமிட்டபடி அரியலூர் மாவட்டத்திற்கு மட்டும் சென்ற அவர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. போலீசார் பல்வேறு நிபந்தனைகள் விதித்தும் அதனை தொண்டர்கள் பின்பற்றாததால் விஜயின் தேர்தல் பரப்புரையில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.
இன்று நாகப்பட்டினம், திருவாரூர்
இந்த நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி இன்று அவர் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். அதன்படி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செல்கிறார். விஜய் பிரச்சாரம் செய்வதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச், புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், கீழ்வேளூர் ரவுண்டானா, காடம்பாடி மைதானம் ஆகிய ஏழு இடங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் அனுமதி கேட்டனர். ஆனால் புத்தூர் ரவுண்டானா கிழக்கு கடற்கரை சாலையில் விஜய் பிரச்சாரம் செய்வதற்காக போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
அதே சமயம் பல்வேறு நிபந்தனைகளும் காவல்துறை தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மதியம் 12.25 மணி முதல் 1 மணிக்குள் 35 நிமிடங்கள் மட்டுமே விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரப்பரை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து காரைக்கால் வழியாக வரும் விஜய்க்கு நாகப்பட்டினம் மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
Also Read: விஜயகாந்த் போல விஜய் – டிடிவி தினகரன் சொன்ன விஷயம்
தொடர்ந்து புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணா சிலை சந்திப்புக்கு சென்று விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதன் பின்னர் சிக்கல், கீழ்வேளூர் பைபாஸ் வழியாக திருவாரூர் செல்லும் விஜய் அங்கு தெற்கு வீதியில் பரப்புரை மேற்கொள்கிறார். மதியம் மூன்று 3 மணி முதல் மாலை 5 மணி வரை அவர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள காவல் துறையினர் அனுமதியளித்துள்ளனர். திருச்சி போல் இல்லாமல் இந்த முறை விஜய் பரப்பரை மேற்கொள்வதில் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என தமிழக வெற்றிக் கழகத்தினர் தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.