மே 13, 2026: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. இன்று மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், தமிழக அரசு அமைக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் கெடு விதித்திருந்த நிலையில், இன்று சட்டசபையில் அதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும், முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
முதலில், காங்கிரஸ் கட்சி சார்பில் பேசிய உறுப்பினர்கள், தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து, அக்கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக்கழக அரசுக்கு கிடைத்தது பெரும்பான்மை:
தமிழகத்தில் ஒரு அரசு அமைய வேண்டுமெனில், அதற்கு குறைந்தது 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில், தற்போதைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் இடையூறு இன்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸைத் (5) தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் (2) தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதேபோல், சுயேச்சை எம்.எல்.ஏ. காமராஜும் (1) தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளார். 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 120 பேரின் ஆதரவு கிடைத்ததன் காரணமாக பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் தகவல்கள் அப்டேட் செய்யப்படுகிறது..