சில்லென மாறும் சென்னை.. ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu weather today: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், ஆகஸ்ட் 20, 2026: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தஞ்சையில் 39 டிகிரி செல்சியஸும், மதுரை, கரூர் மற்றும் ஈரோட்டில் தலா 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.4 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 34.6 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை தொடரும் மழை:
இதனிடையே, தமிழக கடலோரப் பகுதிகளின் கீழடுக்கு வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றோட்டத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தமிழக எம்.எல்.ஏ-க்களின் புதிய சம்பளம்… முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து எவ்வளவு உயர்வு.. முழு விவரம் உள்ளே!
ஆகஸ்ட் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை:
வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது. பொதுவாக இயல்பையொட்டியே வெப்பநிலை நிலவும் என்றாலும், உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரசுப் பள்ளிகளில் மாநில கல்வி கொள்கை பாடத்திட்டங்கள்… ஆக.31 வரை கருத்து தெரிவிக்கலாம்.. பள்ளிக்கல்வித்துறை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.