தேர்தலை முடித்து ஊர் திரும்ப 14,508 சிறப்பு பேருந்துகள்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு..
தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு திரும்பும் வகையில், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஏப்ரல் 25, 2026: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர மொத்தமாக 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து, பேருந்துகள் கிடைத்தபின் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றடைந்தனர்.
ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்:
சிலருக்கு பேருந்து கிடைக்காததால் அதிருப்தி அடைந்த பயணிகள், ஏப்ரல் 22ஆம் தேதி நள்ளிரவு முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கமாக 7 முதல் 8 மணி நேரத்தில் சென்றடையக்கூடிய தூரம், கடும் போக்குவரத்து நெரிசலும் போதிய பேருந்து வசதிகள் இல்லாததாலும் 14 முதல் 15 மணி நேரம் எடுத்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு:
இந்த நிலையில், தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு திரும்பும் வகையில், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 2026 தேர்தல் களம்.. வாக்கு சதவீத உயர்வு யாருக்கு சாதகம்? அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் விவாதங்கள்!
அதன்படி, தேர்தல் முடிந்த பின்னர் ஏப்ரல் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஏப்ரல் 25, 2026 அன்று தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 பேருந்துகள் மற்றும் முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏப்ரல் 26, 2026 அன்று சென்னைக்காக தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 3,184 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 3,345 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. மொத்தமாக 14,508 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளின் முன்பதிவு விவரம்:
இந்த நிலையில், ஏப்ரல் 25, 2026 அன்று 19,676 பயணிகளும் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். ஏப்ரல் 26, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 47,001 பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தொலைதூர பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்யவும், இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) வழியாக முன்பதிவு செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் மேற்கண்ட வசதிகளை பயன்படுத்தி தங்களது பயணத்தை சிரமமின்றி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.