AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கனமழை எச்சரிக்கை; தமிழகத்தில் ஒரு வாரம் மழை தொடரும்!

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு பல இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 27 முதல் 30 வரை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை தொடரக்கூடும்.

கனமழை எச்சரிக்கை; தமிழகத்தில் ஒரு வாரம் மழை தொடரும்!
கோப்பு புகைப்படம்
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 25 Jun 2026 17:00 PM IST

தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக லேசான மழை பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்த நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி பகுதியில் 22 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளது. மாநிலம் முழுவதும் வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இயல்பை ஒட்டிய சூழல் நிலவியது.

வெப்பநிலை நிலவரம்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த ஒரு நாளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்திருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவிலேயே பதிவானது. மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 39 டிகிரி செல்சியஸாக பதிவானது. அதேசமயம் சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 23 டிகிரி செல்சியஸாகவும், மலைப்பகுதிகளில் உதகமண்டலத்தில் 12.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

மழைக்கு காரணமான வானிலை அமைப்பு

தமிழக கடலோர பகுதிகளின் மீது சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இந்த வானிலை அமைப்பின் தாக்கத்தால் மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை தொடரும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை வாய்ப்பு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் மழை தொடரும்

ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஜூன் 27 முதல் 30 வரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் விவசாயிகள் மற்றும் மலைப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு தனிப்பட்ட முன்னறிவிப்பு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரைவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 25 முதல் 29 வரை பலத்த காற்று வீசும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் சில அரபிக்கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. இதனால் குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Follow Us