Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொடர் விடுமுறை.. எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம்… பயணிகள் பெரும் அவதி!

Omni Bus Fare Hike : தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பேருந்துகளில் ரூ.4000 வரை வசூலிக்கப்பட்டு வருவதாக பயணிகள் கூறி வருகின்றனர்.

தொடர் விடுமுறை..  எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம்… பயணிகள் பெரும் அவதி!
ஆம்னி பேருந்துகள்
Umabarkavi K
Umabarkavi K | Published: 14 Aug 2025 12:26 PM

சென்னை, ஆகஸ்ட் 14 : தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக, ஆம்னி பேருந்துகளின் (Omni Bus Fare Hike) கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்தில் பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை வருகிறது. அதாவது, 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தினம், 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்று கிழமை என வார விடுமுறை இருக்கிறது. இதனால், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். சிலர் 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை முதலே ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

குறிப்பாக, 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி இன்று இரவு முதல் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும், ரயில்வே துறையில் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளிலும், சிறப்பு ரயில்களிலும் அறிவிக்கப்பட்டு இருந்த முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால், பொதுமக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. வழக்கமாக இருக்கும் நாட்களை விட, மூன்று மடங்கு டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளது. இது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read : வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவர்.. பறிபோன உயிர்.. பதறவைக்கும் வீடியோ!

எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம்

குறிப்பாக, சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், விடுமுறை தினம் என்பதால், சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ரூ.4000 வரை வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதோடு இல்லாமல், சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் ரூ.4000 வரை ஆம்னி பேருந்தில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரூ.2,000 வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னையில் இருந்து சேலம், திருச்சி மற்றும் பிற இடங்களுக்குச் செல்வதற்கு ரூ.1,500 மற்றும் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது.

Also Read : தமிழ்நாட்டில் 207 அரசு பள்ளிகள் மூடலா..? தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம்!

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், விமான கட்டணம் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, கோவை செல்லும் விமானங்களில் கட்டணம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை உயர்ந்துள்ளதாக தெரிகிறது.