Tamil Nadu News Live Updates: பொதுத்தேர்வு அட்டவணை தொடர்பாக வெளியான முக்கிய தகவல்!
Tamil Nadu Breaking news Today 29 July 2025, Live Updates: தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது நடைமுறையில் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

LIVE NEWS & UPDATES
-
வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் அத்துமீறல் – இளைஞர் கைது
சென்னை சூளைமேடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்து போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் தேனீக்கூட்டை அகற்ற வந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ராஜூ விஸ்வகர்மாவை 4 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அவர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
-
தமிழக மீனவர்கள் கைது… மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இன்று மட்டும் 14 மீனவர்கள் இருவேறு இடங்களில் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா.. 50 ஆடுகள் பலியிடல்
ஆடி மாத 2ம் செவ்வாய்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட்டத்தில் நத்தம் அருகே குட்டுப்பட்டியில் கரந்தமலை கருப்பு சாமி கோயிலில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில் நள்ளிரவில் தொடங்கிய இந்த விழா விடிய விடிய நடந்தது. இந்த விழாவில் நேர்த்திக்கடனாக 50க்கும் மேற்பட்ட ஆடுகள் செலுத்தப்பட்டது. உருண்டை சோற்றுடன் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
-
Chennai Fire Accident: போரூர் அருகே நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த டாரஸ் லாரி
சென்னை போரூர் அருகே புழல் நோக்கி பைபாஸ் சாலையில் சென்றுக் கொண்டிருந்த டாரஸ் வாகனம் சூரப்பட்டு பகுதியில் தீப்பற்றி எரிந்தது. அதிக பாரம் ஏற்றி வந்ததால் லாரியின் சக்கரத்தில் உராய்வு ஏற்பட்டு லாரி முழுவதும் தீ பரவியது.இந்த தீ விபத்து காரணமாக போரூர் நெடுஞ்சாலையில் இரு பக்கமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
நெல்லை கொலை வழக்கு.. சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் ஐடி ஊழியர் காதல் விவகாரத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நிதி வேண்டாம், நீதி தான் வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளியான சுர்ஜித்தின் பெற்றோர்கள் கைது செய்யப்பட வேண்டும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
-
தூத்துக்குடியில் செல்போனில் பேசியதால் தங்கை திட்டு.. அக்கா தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் புதிய துறைமுகம் தெர்மல் நகர் பகுதியில் வசித்து வரும் அரிச்சந்திரன் என்பவரின் 18 வயது மகள் தர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டிருந்த தர்ஷினியை படிக்க வேண்டும் என தங்கை வெளியே போக சொன்னதால் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னையில் அமைக்கப்படும் பாரா விளையாட்டு மைதானம்.. உதயநிதி ஆய்வு
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்று சென்னையில் கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா பகுதியில் அமையவுள்ளது. இந்த பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
-
10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியீடு
2025-2026ஆம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வுக்கு தயாராக வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் படிக்க
-
ஆடி மாதம் 2வது செவ்வாய்.. சாமி தரிசனம் செய்ய குவிந்த பெண்கள்
ஆடி மாதம் 2வது செவ்வாயை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களிலும் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்தும், தங்கள் வேண்டுதல்களுக்கான நேர்த்திகடன்களையும் நிறைவேற்றியும் இறை வழிபாடு செய்தனர்.
-
தேர்தலுக்கு முன்பு பாஜக.. கனிமொழி எம்.பி., காட்டமான விமர்சனம்
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தமிழர்களின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை பாஜக கண்டறிந்து விடுவதாக மக்களவையில் கனிமொழி எம்.பி., கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் தமிழர்களின் தொன்மையை கண்டறிந்த கீழடி நாகரீகத்தை ஏற்க மறுக்கிறது என காட்டமாக விமர்சித்துள்ளார்.
-
ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் படிக்க
-
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்: எடப்பாடி பழனிசாமி
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. அதிமுக கூட்டணியில் யார், யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்விக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி தெரிவிப்போம் என அவர் கூறியுள்ளார்.
-
அனைவரும் ஒன்று சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்.. அதிமுகவினருக்கு அறிவுரை
2026 சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என ராணிப்பேட்டையில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. 12.65 லட்சம் மனுக்கள் வந்ததாக தகவல்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மகளிர் உரிமை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
நெல்லை ஆணவப்படுகொலை.. போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு..
நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின்குமாரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் சுர்ஜித் தாய் தந்தையான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்ய வேண்டும் எனவும் அவர்களின் தூண்டுதலின் பேரில் தான சுர்ஜித் தனது மகனை கொலை செய்துள்ளார் என்பதால் அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் சுர்ஜித் ஆகிய மூன்று பேர் மீது வன்கொடுமை உட்பட ஆறு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
-
நெல்லையில் ஆணவப்படுகொலை.. சுர்ஜித் என்ற இளைஞர் கைது..
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அக்காவின் காதலனை பேச்சுவார்த்தைக்கு அழைத்த தம்பி இளைஞரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. துரிதமாக செயல்பட்ட காவல் துறையினர் சுர்ஜித் என்ற நபரை கைது செய்துள்ளனர்.
-
சாலையில் பெருக்கெடுத்தும் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளனூர் கிராமத்தில் சரியான முறையில் கழிவுநீர் ஓடை அமைத்து தராததால் சாலையில் பெருக்கெடுத்தும் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 300 குடும்பத்தினரும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்துள்ளனர்.
-
Edappadi Palanisamy Campaign: ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி..
மூன்று நாட்கள் ஓய்வெடுத்த பின்பு இன்று அதாவது ஜூலை 29, 2025 தேதியான இன்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தை தொடங்குகிறார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் என்பது ஆகஸ்ட் 8, 2025 வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று மக்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி..
ஜூலை 26, 2025 அன்று எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 29 2025 தேதியான இன்று சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்..
தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்தார். அப்பொழுது பிரதமர் மோடியை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டதாகவும், அதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த பேசினார். இதனால் 26, ஜூலை 2025 ஆம் தேதி மேற்கொள்ளப்பட இருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது..
-
Edappadi Palanisamy Campaign: மூன்று நாட்களுக்கு பின் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி..
எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை ஜூலை 24, 2025 ஆம் தேதி தொடங்கினார். மூன்று நாட்கள் ஓய்வெடுத்த நிலையில், இன்று அதாவது ஜூலை 29, 2025 தேதியான இன்று மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறார்.
-
திருட வந்த இடத்தில் படுத்து உறங்கிய நபர்.. போதையால் வந்த சோதனை..
அனைவரும் தூங்கிய பிறகு திருட திட்டமிட்ட வட மாநில தொழிலாளி அதிக அளவு போதையில் இருந்ததால் வீட்டின் மாடியில் தூங்கி விட்டார். இது தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இரவு 11 மணிக்கு மேல் திட்டமிட்டு திருட வந்ததாகவும், போதை தலைக்கேறிய நிலையில், திருடாமல் அங்கேயே தூங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமன்றி அவருடன் திருட வந்த மற்றொரு நபர் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் படிக்க..
-
போதையில் வட மாநில தொழிலாளி செய்த செயல்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு, வீட்டிற்கு திருடச் சென்ற போது அதிக அளவு மது போதையில் இருந்ததால் அங்கேயே படுத்து உறங்கியுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து, வீட்டின் உரிமையாளர் பஷீர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நபர் அதிக போதையில் இருந்ததால் கண் விழிக்க முடியாமல் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
-
பாலியல் தொல்லை தந்த தாத்தா.. அடித்து உதைத்த பேத்தி..
சிவகங்கை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பேத்திகளிடம் தாத்தா பாலியல் சீண்டலிக் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 11 வயது சிறுமி தனது தாத்தாவை அடித்து உதைத்துள்ளார். பின்னர் தாயிடம் இருவரும் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தாய், உடனடியாக காவல் நிலையத்தில் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன்படி, முதியவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் படிக்க..
-
பேத்திகளிடம் பாலியல் சீண்டல்.. தாத்தா செய்த செயலால் அதிர்ச்சி..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரியான 75 வயது முதியவர். இவருடைய மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், பேரக்குழந்தைகள் மற்றும் அவருடைய மருமகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த போது, தனது 19 வயது பேத்தியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளர். அதுமட்டுமன்றி 11 வயது பேத்தியிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
-
கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்காததற்கு ஓபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டிற்காக கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்காதது கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்னையை சுட்டிக்காட்டி இதனால் ஏழை மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
-
திருமாவளவனுக்கும் முதலமைச்சராகும் தகுதி உண்டு: டிடிவி தினகரன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் முதலமைச்சராகும் தகுதி உண்டு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தான் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும், அது என்ன தொகுதி என முடிவாகவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
-
விஜய்யின் நயவஞ்சக சூழ்ச்சி.. கரு.நாகராஜன் கடும் பதிலடி!
பிரதமர் மோடியையும், பாஜக – திமுகவையும் கடுமையாக விமர்சித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்திருந்தார். இதனிடையே இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், “திமுகவின் பாஜகவையும் முடிச்சுப்போடும் விஜய்யின் நயவஞ்சக சூழ்ச்சி என்னவென்று புரியவில்லை. கங்கைகொண்ட சோழபுரம் விழாவை அவர் கொச்சைப்படுத்துகிறார்” என தெரிவித்துள்ளார்.
-
Tirunelveli: போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடியில் நேற்று நள்ளிரவு இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரியை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்ட முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்த இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஆலங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்ட வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் சிறையில் இருந்து வந்த 2 வாரங்களில் மீண்டும் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது.
-
தேமுதிக கூட்டணி யாருடன்?
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து மக்கள் மத்தியில் பெரும் கேள்வி இருந்து வருகிறது.
-
DMDK Election Plan : பிரேமலதா விஜயகாந்த் பிளான் என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலில் விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதே தொகுதியில்தான் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா விஜயகாந் போட்டியிட்டு டெபாசிட் இழந்திருந்தார்
-
மடப்புரம் வழக்கில் புகாரில் இருப்பது என்ன?
நிகிதா என்பவர் தனது தாய் சிவகாமியுடன் கோவிலுக்கு காரில் வந்திருந்தார். அப்போது அந்த காரை பார்க் செய்வதற்காக கோவில் காவலாளியான அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும் அப்போது அந்த காரில் இருந்து பத்து சவரன் நகை திருட்டுப் போனதாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது முதலில் சாவி அஜித்திடம் கொடுக்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது
-
மடப்புரம் வழக்கில் புது திருப்பம்
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கோவிலுக்கு வந்த நிகிதாவிடம் கார் சாவி வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் புது விஷயம் வெளியாகியுள்ளது, அந்த கார் சாவியை மற்றொரு காவலர் முருகன் நிகிதாவிடம் இருந்து பெற்று அதனை அஜித்குமாரிடம் கொடுத்ததாக பேட்டி அளித்துள்ளார்.
-
முன்னதாக மனு அளித்த ராமதாஸ்
அன்புமணி ராமதாஸின் நடைபயணம், ஜூலை 25, 2025 அன்று சென்னையில் திருப்போரூரில் தொடங்கியது. ஆனால் இந்த நடைபயணத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பில் டிஜிபி இடம் மனு அளிக்கப்பட்டது .
-
PMK Party : மக்களுக்காக நடைபயணம்
பாமக கட்சிக்குள் குடும்ப பிரச்னை உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்புமணி தரப்பில் 100 நாள் நடைபயணத்தை தொடங்கினார். தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களின் உரிமைகளை மீட்வே இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படுவதாக அவர் அறிவித்திருந்தார்.
-
Ramadoss : உள்துறை செயலாளரிடம் மனு
பாமகவின் அன்புமணி ராமதாஸ், அனுமதி பெறாமல் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருவதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்துறை செயலாளரிடம் மனு அளித்துள்ளார் ராமதாஸ் . ஏற்கெனவே டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது உள்துறை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது
அடுத்த வருடம் தமிழ்நாட்டில் தேர்தல் இருப்பதால் இப்போதே அரசியல்களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் குடும்ப பிரச்னையில் சிக்கித்தவிக்கிக்கிறது பாமக.(pattali makkal katchi) இந்த பிரச்னையை சரிசெய்யலாம் என்ற எண்ணத்தில் அன்புமணி தரப்பில் 100 நாள் நடைபயணத்தை தொடங்கினார். தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களின் உரிமைகளை மீட்பதற்காக இந்த நடை பயணம் என குறிப்பிட்டிந்தார். அதன்படி, ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25, 2025 அன்று சென்னையில் திருப்போரூரில் இந்த நடைபயணமானது தொடங்கியது. ஆனால் இந்த நடைபயணம் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பில் டிஜிபி இடம் மனு அளிக்கப்பட்டது . ஆனால் அந்த மனு மீது நடவடிக்கை இல்லை இதனால் உள்துறை செயலாளரிடம் மனு அளித்துள்ளார் ராமதாஸ். இது தொடர்பான அப்டேட்களை பார்க்கலாம். இன்று ஆடி செவ்வாய்க்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும். அது தொடர்பான ஆன்மிக செய்திகளையும் பார்க்கலாம். இதுபோல முக ஸ்டாலினின் இன்றைய திட்டங்கள், வானிலை விவரம், மழை விவரம் உள்ளிட்ட விஷயங்களை லேட்டஸ்ட் செய்திகளாக உடனுக்குடன் பார்க்கலாம்
Published On - Jul 29,2025 7:02 AM